ரஜினிகாந்துடன் கூட்டணி வைத்தால் யார் முதல்வர் என்பது குறித்துப் பேசி
முடிவு செய்யப்படும் என நெல்லையில் கமலஹாசன் தெரிவித்தார்.மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் இன்று நெல்லை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி நிச்சயம் அமையும். நல்லவர்களோடு இணைந்த மூன்றாவது அணி அமைப்போம்.எந்த கட்சியினருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவோ பேச்சுவார்த்தையோ நடைபெறவில்லை.
ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதைப் பேசி முடிவெடுப்போம். டார்ச் லைட்சின்னம் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்னும் நான்கைந்து நாட்களில் நீதிமன்றத்தை நாடுவோம்.வரும் தேர்தலில் மக்கள் மாற்றத்தை நிகழ்த்துவார்கள். மக்கள் சக்தியை நம்பியே நாங்கள் களம் இறங்குகிறோம்.
எங்கள் கட்சி யாருக்கும் பி.டீம் அல்ல. நாங்கள் எப்போதும் எங்களுக்கு ஏ டீம் தான்.தேர்தல் வாக்குறுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இலவசமாக வழங்குவது உள்ளிட்டவை இடம்பெறும். நல்ல விஷயங்கள் எந்த சித்தாந்தங்களில் இருந்தாலும் அதனை நாங்கள் எடுத்துக்கொள்வோம். வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் தான் போட்டியிடத் திட்டமிட்டுள்ளேன். எந்த தொகுதி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.