திருவனந்தபுரத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் சாலை விபத்தில் பத்திரிகையாளர் பலியான சம்பவத்தில் டிப்பர் லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். வாகனத்தில் மோதிவிட்டு ஏன் நிற்காமல் சென்றார் என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவனந்தபுரம் பள்ளிச்சல் என்ற இடத்தை சேர்ந்தவர் பிரதீப் (45). இவர் ஏராளமான மலையாள டிவி சேனல்களில் நிருபராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி இவர் நடத்தி வந்தார். தன்னுடைய சேனலில் இவர் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஆளும் கட்சியினருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களைக் கூறி வந்தார். இதையடுத்து அவருக்குப் பலமுறை மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மாலை 3.30 மணியளவில் பிரதீப் பணி முடிந்து வீட்டுக்குத் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். நேமம் என்ற இடத்தில் நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. அந்த வாகனம் பிரதீப்பின் தலைமீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே அவர் மூளை சிதறி பரிதாபமாக இறந்தார்.
ஆளும் கட்சிக்கு எதிராக விமர்சனம் செய்து வந்த நிலையில் பிரதீப் மர்ம வாகனம் மோதி இறந்தது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்று காங்கிரஸ், பாஜக உட்பட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள பத்திரிகையாளர் சங்கம் முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து முதல்வர் பினராயி விஜயன் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் பிரதீப்பின் மீது மோதிய வாகனம் ஒரு டிப்பர் லாரி என தெரியவந்தது.
போலீசாரின் தீவிர விசாரணையில் டிப்பர் லாரி டிரைவர் ஜோய் (50) என்பவரைக் கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் பிரதீப்பின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்குக் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, நடிகரும், எம்பியுமான சுரேஷ் கோபி மற்றும் எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து ஐஜி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா தெரிவித்துள்ளார்.