Saturday, Apr 17, 2021

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - பிக் பாஸ் நாள் 82

by Mahadevan CM Dec 26, 2020, 13:44 PM IST

முந்தைய நாளின் தொடர்ச்சி. அடுத்த நாள் கிறிஸ்துமஸ் என்பதால் தான் லக்சரி டாஸ்க் முடிந்த உடன் பர்பாமன்ஸ் பற்றியும் நாமினேட் செய்ய விட்டார்கள் போலிருக்கிறது. நாமினேஷனில் ஆளுக்கொரு கத்தியை கையில் கொடுத்திருந்தால் பல கொலைகள் நடந்திருக்கும். இந்த வீட்டில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்குப் பழிக்கு பழி வாங்கும் வன்மம் இருக்கிறது. அதை அவர்கள் வெளிப்படுத்தும் போது பார்க்கவே நமக்கு எரிச்சலாக இருக்கிறது. பாலா தன் பேரைத் தான் சொல்லப் போகிறான் என்று தெரிந்ததும், பாலா மேல் அத்தனை குற்றச்சாட்டுகளை சொன்னவுடன் தான் அனிதா மனம் மாறியது .

கமல் சார் முன்பு தனது குறையை பேசியதால் அனிதாவை பழி வாங்கினார் ஆரி. தனது கேப்ட்ன்சியில் பிரச்சனை வர காரணமாக இருந்த அனிதாவை, உப்பு பெறாத விஷயத்துக்கு நாமினேட் செய்தார் பாலா. இப்படி ஒவ்வொருவரும் பழி வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன், ஹவுஸ்மேட்ஸ் முகமூடியுடன் இருப்பது பற்றி பேச்சு வந்தது. ஆனால் இந்த வீட்டில் இருக்கும் அனைவருமே ஒரு போலியான முகமூடி அணிந்திருக்கிறார்கள். வெளியே சிரித்து பேசி, அன்பாய் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் ஒவ்வொருவர் மனதிலும் வன்மம் குவிந்து கிடக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பழிதீர்த்து கொள்கிறார்கள். சாரி, மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இந்த வீட்டில் எந்த மதிப்பும் இல்லை.

நாமினேஷன் ப்ராசஸ் முடிந்தவுடன், கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சக போட்டியாளர்களுக்கு பரிசுகல் கொடுக்கலாம் என்றொரு அறிவிப்பு வந்தது. அனைவரும் தனிதனியாக பரிசுகளை தயார் செய்தார்கள். ஒவ்வொருவராக கன்பெஷன் ரூமுக்கு சென்று யாருக்கான பரிசு என்பதை சொன்னார்கள்.

ரம்யாவின் முறை வரும்போது, அவர் பரிசு கொடுக்க நினைத்தது அனிதாவிற்கு தான். ஒருவேளை அனிதாவிற்கு வேறு யாரேனும் பரிசு கொடுத்து, ஷிவானிக்கு யாரும் பரிசு கொடுக்காத நிலையில் இந்த பரிசை ஷிவானிக்கு கொடுக்கும் படி வேண்டுகோள் விடுத்தார். இறுதியில் அவர் நினைத்தது போல ஷிவானிக்கு யாருமே அனுப்பாததால், ரம்யாவின் பரிசு ஷிவானிக்கு போனது. ஷிவானிக்கு யாரும் அனுப்ப மாட்டார்கள் என்று எப்படி கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை பாலாவிடம் கேட்டிருப்பார் என்று தோன்றுகிறது. அப்படி இருந்தாலும் ரம்யாவின் இந்த செயல் பாராட்டப் பட வேண்டியது தான்.

இதுவே 2 மணிக்கு மேல் ஆனதால் அனைவரும் தூங்கச் சென்றார்கள்.

நாள் 82

ஊதா கலரு ரிப்பன் பாடலோடு விடிந்தது. அதிசயமாக அனைவரும் அட்டண்டென்ஸ் போட்டிருந்தார்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை சொன்ன பிக்பாஸ் அனைவருக்குமான பரிசுகளை கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் இருந்து எடுத்துக் கொள்ளச் சொன்னார். இதில் ரம்யாவுக்கு மட்டும் பரிசு கிடைக்கவில்லை.

பரிசுப் பெட்டிகளை பிரித்த உடன் யார் அனுப்பியது என்று தெரிந்து கொண்டார்கள். ஆரிக்கு அனிதா அனுப்பிய பரிசும் அதற்கு அவர் சொன்ன காரணமும் தேவையில்லாத ஆணி. கடும் கண்டனங்கள். ரம்யாவுக்கு பரிசு வரவில்லை என்பதை அறிந்து ஷிவானியும், ஆஜித்தும் சில பரிசுகளை கொடுத்தது நெகிழ்ச்சி. அத்தனை பெரிய வீட்டில் அவருக்கு மட்டும் பரிசு வராமல் இருந்தது கடினமாகவே இருக்கும். ஆண்கள் பெரும்பாலும் உடைகளையே அனுப்பியதால் இது நடந்திருக்கும் என்று கருதுகிறேன்.

வீட்டில் கிறிஸ்துமஸ் கேக் செய்வதையும் டாஸ்க்காக கொடுத்தார் பிக்பாஸ். ரியோ, கேப்பி இருவரையும் கன்பெஷன் ரூம் அழைத்த பிக்பாஸ் கேக் செய்முறையை கடகடவென மனப்பாடச் செய்யுளை ஒப்பிப்பது போல் சொன்னார். இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருவருமே கேக் செய்த அனுபவம் இருந்ததால் பிரச்சினை இல்லை. ஆனாலும் ரியோவின் அணி சொதப்பியது. கேப்பி அணியே வெற்றி பெற்றது.

அடுத்து ஒவ்வொருவராக கம்பெஷன் ரூம் அழைத்த பிக்பாஸ் இந்த வீட்டைப் பற்றி, வீட்டில் நடந்த சம்பவங்களை பற்றி ஒரு கேள்வி கேட்டார் அதற்கு 3 ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். கேள்விகள் அனைத்தும் ஜாலிக்காக கேட்கப்பட்ட கேள்விகள். கேள்விக்கு சரியான பதில் சொல்பவர்களுக்கு ஆக்டிவிட்டி ஏரியாவில் இருக்கும் பரிசுகளில் இருந்து எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

"சோமே" என்று அழைத்து ஜாலி பண்ணிய பிக்பாஸ், பரிசுகளை எடுத்து வந்த பிறகு பிரிக்காமல் இருந்ததையும் கலாய்த்தார். ஒவ்வொருவர் எடுத்து வந்த பெட்டியிலும் அனைவருக்கும் பரிசுகள் இருந்தது.

பிறகு கிருஸ்துமல் கொண்டாட்டங்கள் தொடங்கியது. பாதுகாக்கப்பட்ட பகுதியில் நின்று இசைக்குழு ஒன்று பாடல்களை பாடி மகிழ்வித்தது.

இரவு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது. விருந்து ஆரம்பிக்கும் முன் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் இருந்து தான் கற்றுக் கொண்ட விஷயத்தை பற்றி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் பாலா. ஆரிக்கு துணி துவைக்கும் பிரஷும், காது குட்சியும் பட்ஸும் அனுப்பிய அனிதா அதற்கு விளக்கம் வேறு கொடுத்தார்.

இன்று ஆண்டவர் தினம். பொறுத்திருந்து பார்ப்போம்.

You'r reading கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - பிக் பாஸ் நாள் 82 Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை