நடப்பு நிதியாண்டில் மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 1.06 லட்சம் கோடியை தாண்டியது.
கடந்த 2018-ம் அண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி நாடு முழுவதும் அமலானது. நடப்பு நிதியாண்டில் (2019) மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூபாய் 1.06 லட்சம் கோடியை தாண்டி உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்திய நாளில் இருந்து, 2019 மார்ச் மாதத்தில் வசூலிக்கப்பட்ட தொகை மிக அதிகம். இது 15.6 சதவீதம் உயர்வு.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில்,' 2019-ம் ஆண்டில் பிப்ரவரி முதல் மார்ச் 31ம் தேதி வரை ஜிஎஸ்டி 3பி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தவர் எண்ணிக்கை 75.95 லட்சம். இதில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.20 ஆயிரத்து 353 கோடி, மாநில அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.27 ஆயிரத்து 520 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.50 ஆயிரத்து 418 கோடி, கூடுதல் வசூல் (செஸ் வரி) ரூ.8 ஆயிரத்து 286 கோடி ஆகும். 2018 மார்ச் மாதத்தில், ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.92,167 கோடியாக இருந்தது’ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.