கிராமப்புற பெண்களின் வருவாய்க்காக உதவும் “காயர் உத்யமி யோஜனா” திட்டம் பற்றித் தெரிந்துகொள்வோம்...!

Lets find out about the Coir Udyami Yojana scheme which will help the income of rural women ...!

by Loganathan, Sep 2, 2020, 12:01 PM IST

கயிறு தொழில் அதிக தொழிலாளர்களைக் கொண்டதும் ஏற்றுமதி செய்யத்தக்கதும், பாரம்பரியமிக்கதுமான விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாகக் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்று வருகிறது. கயிறு தொழிலில் கேரளா மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. ஆனாலும் பழுப்பு நிற நார் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

மத்திய அரசின் கயிறு வாரியம் (COIR BOARD) கயிறு தொழிலின் மேம்பாட்டிற்கு, காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) என்ற கயிறு தொழில் முனைவோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது .

நோக்கம்

கிராமப்புற தொழில்முனைவோரை உருவாக்குதல்.
பெண்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்.
தேங்காய் மட்டை கொண்டு வருமானத்தைப் பெருக்குதல்.
நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் தேங்காய் நார் தொழிலை நவீனப்படுத்துதல்.

தேங்காய் நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் செயல்முறை தொழில்நுட்பத்தைப் புதுப்பித்தல் மூலம் உற்பத்தித் திறன், தரம் போன்றவற்றை மேம்படுத்துவது.
தேங்காய் மட்டையைப் பயன்படுத்தி தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார் பொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்துவது.கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈர்ப்பது.

தொழிலின் திட்ட மதிப்பு

தொழிலுக்கான திட்ட மதிப்பு அதிகபட்சமாக ரூ.10 இலட்சத்திற்குள் இருந்தால் காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் நடைமுறை மூலதனத்தையும் (working capital) பெறலாம். இந்த நடைமுறை மூலதனம் தொழிலுக்கான திட்ட மதிப்பில் 25%-க்குள் இருக்க வேண்டும்.

அரசு மூலதன மானியம்

காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் அரசு மூலம் வழங்கப்படும் மானியம் (Subsidy) தொழிலின் திட்ட மதிப்பில் 40% சதவீதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வரை வழங்கப்படும்.

தொழில் முனைவோர் சொந்த முதலீடு

தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5% விழுக்காட்டைப் பயனாளிகள் தொழிலில் முதலீடு செய்ய வேண்டும்.

வங்கிக் கடன்

வங்கி பயனாளிகளுக்கு அதிகபட்சமாகத் தொழிலின் திட்ட மதிப்பீட்டில் 55% சதவீதத்தை வங்கிக் கடனாக வழங்கும்.

பயனாளிகளின் தகுதிகள்

18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.காயர் உத்யமி யோஜனா விண்ணப்பிக்க எந்த வித வருமான வரம்பும் கிடையாது.தென்னை நார் சம்பந்தமான பொருட்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டும் காயர் உத்யமி யோஜனா திட்டம் பொருந்தும்.தனிநபர்கள், சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புடன் கூடிய நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் காயர் உத்யமி யோஜனா திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய அரசு அலுவலகங்கள்

காயர் உத்யமி யோஜனா திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறக் கயிறு வாரியம் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள்

காயர் உத்யமி யோஜனா திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks) மூலம் கடனுதவி பெறப் பரிந்துரைக்கப்படுவர்.

மேலும் அறிய www.coirboard.com

You'r reading கிராமப்புற பெண்களின் வருவாய்க்காக உதவும் “காயர் உத்யமி யோஜனா” திட்டம் பற்றித் தெரிந்துகொள்வோம்...! Originally posted on The Subeditor Tamil

More Business News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை