நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கூடலூர். இப்பகுதி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநில எல்லையில் உள்ளது. பெரும்பாலும் இங்கு வனப்பகுதிகள் தான் அதிகமாக உள்ளன. இந்நிலையில் இங்குள்ள மசினகுடி பகுதியைச் சேர்ந்த மாதன் என்பவரின் மனைவி கௌரி (50) தனது மாடுகளை மேய்ப்பதற்காக அருகில் உள்ள வனப்பகுதிக்குச் சென்றார். அவருடன் கணவர் மாதன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் தங்களது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த சமயத்தில் அங்குள்ள ஒரு புதரில் பதுங்கியிருந்த ஒரு புலி திடீரென பாய்ந்து கௌரியை கவ்வியது. கணவன் மாதன் மற்றும் அப்பகுதியினரின் கண்ணெதிரே அந்தப் புலி கண்ணிமைக்கும் நேரத்தில் கௌரியை இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த மாதன் மற்றும் அப்பகுதியினர் கூக்குரலிட்டபடியே புலியின் பின்னால் ஓடினர். ஆனால் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை கௌரியை இழுத்துச் சென்ற பின்னர் அவரை அங்கேயே போட்டு விட்டு அந்தப் புலி தப்பி ஓடியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே கௌரி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதே பகுதியில் இதற்கு முன்பும் பலமுறை புலி அட்டகாசம் செய்துள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மாட்டைப் புலி அடித்துக் கொன்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கவுரியை கொன்ற புலியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மீண்டும் அந்தப் பகுதிக்குப் புலி வராமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.