இந்திய ஐ.டி. தொழிலில் இந்த நிதியாண்டில் ஒரு பெருத்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. பெரிய நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ், இன்போசிஸுக்கு அடுத்த இடத்தில் இருந்த விப்ரோவை பின்னுக்குத் தள்ளி ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த முறை 2012-ம் ஆண்டு இதுபோன்றதொரு மாற்றம் நிகழ்ந்தது. அப்போது காக்னிசண்ட், இன்போசிஸை கீழே தள்ளி இரண்டாமிடத்தைப் பிடித்தது. அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டதாயிருந்தாலும், பல வழிகளில் இந்தியாவில் ஆதாரத்தை கொண்டுள்ளதும்,
பெரும்பான்மை பணியாளர்களை இந்தியாவில் கொண்டுள்ளதுமாகிய காக்னிசண்ட் நிறுவனத்தை இந்திய நிறுவனம் என்று கணக்கில் கொண்டால், ஹெச்சிஎல் பெரிய நிறுவனங்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும்.
விப்ரோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாகிய இரண்டு நிறுவனங்கள் திவால் ஆனது, அமெரிக்காவில் சுகாதாரசேவை வணிகத்தில் பின்னடைவு ஏற்பட்டது ஆகிய காரணங்களால் இந்த நிதி காலாண்டில் விப்ரோவின் வருமானம் மாற்றம் ஏற்படாமல் நீடிக்கலாம் அல்லது 2 சதவீதம் சரிவை சந்திக்கலாம். 2018-2019 ஆண்டின் முதல் காலாண்டில் விப்ரோவின் வருமானம் 2,015 மில்லியன் டாலருக்கும் 2,065 மில்லியன் டாலருக்கும் இடையில் அமையலாம்.
ஹெச்சிஎல் காலாண்டுக்கான வழிகாட்டுதலை கொடுக்காவிட்டாலும், முழு ஆண்டுக்கும் அதன் வளர்ச்சி 9.5 முதல் 11.5 சதவீதமாக அமையும். முதல் காலாண்டில் 2 சதவீத வளர்ச்சியுடன் 2,079 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டும். அது நிச்சயமாகவே விப்ரோ ஈட்டும் வருமானத்தை காட்டிலும் அதிகம். 1 சதவீத வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் கூட, 2,058 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டும். அது ஏறத்தாழ விப்ரோவின் அதிக பட்ச வருமானத்திற்கு சமமாகும்.
ஹெச்சிஎல் தலைமை செயல் அதிகாரி சி. விஜயகுமார், "இது வழக்கமான வணிக நடவடிக்கைதான். எங்களுக்கு மிக அருகில் இருக்கும் போட்டியாளரை முந்தும் நிலையில் தற்போது இருக்கிறோம்," என்று கருத்து தெரிவித்துள்ளார்.