பிரதமர் மோடி தனி விமானத்தில் சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் கவர்னர், முதல்வர், பாஜக தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்க்கும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி இன்று மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக, சென்னை முதல் மாமல்லபுரம் வரை விழாக்கோலம் பூண்டுள்ளது.
மாமல்லபுரம் நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் பிரதமரை கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர்.
மேலும், பிரதமருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் ஜி.கே.வாசன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அவர் ஹெலிகாப்டரில் மாமல்லபுரத்திற்கு சென்றார்.
இதனிடையே, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை வந்திறங்கியுள்ளேன். சிறந்த கலாசாரத்திற்கும், விருந்தோம்பலுக்கும் புகழ் பெற்ற தமிழ்நாட்டு மண்ணில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு வரவேற்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. மாமல்லபுரத்தில் நடைபெறும் முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் இந்தியா, சீனா இடையேயான நல்லுறவு மேலும் மேம்படுவதற்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.