சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து

by Ari, Apr 21, 2021, 16:28 PM IST

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக சென்னையில் மின்சார ரயில் சேவை 10 மணிக்கு மேல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோட்டத்திற்கு உள்பட்டு சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மொத்தம் 672 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் 672ஆக இருந்த சென்னை புறநகர் ரயில் சேவை 434 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எந்த புறநகர் ரயில் சேவையும் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை சென்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் 150 சேவைகளும், அதேபோல் சென்னை சென்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மார்க்கத்தில் 64 சேவைகளும், சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 68 ரெயில் சேவைகளும், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் 152 சேவைகள் என மொத்தம் 434 ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை இந்த 4 மார்க்கத்திலும் மொத்தமாக 86 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. 2 மணி நேரத்திற்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ரயில் சேவைகள் அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோர், முன்கள பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து Originally posted on The Subeditor Tamil

More Chennai News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை