அமைச்சர் வேலுமணி ஆயிரம் கோடிக்கு எம்.சாண்ட் ஊழல்.. ஸ்டாலின் திடுக் தகவல்

by எஸ். எம். கணபதி, Dec 13, 2019, 12:24 PM IST
Share Tweet Whatsapp

சென்னை மாநகராட்சியில் எம்.சாண்ட் பயன்படுத்தப்பட்டிருப்பதில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :

அ.தி.மு.க. அரசில், உள்ளாட்சித் துறையின் ஊழல்கள், மக்கள் மன்றம் மூலம் நீதிமன்றம் வரை அணிவகுத்து நிற்கின்றது. இந்த நேரத்தில், சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்குப் பதில், எம்-சாண்ட் பயன்படுத்தியதில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

இத்துறையின் அமைச்சராக இருக்கும் எஸ்.பி.வேலுமணி மீது ஏற்கனவே உள்ளாட்சி ஊழல்கள் குறித்து, திமுக சார்பிலும், அறப்போர் இயக்கம் சார்பிலும், 349 டெண்டர்களில் ஊழல் நடந்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, “48 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்” என்று தனியாகவே ஒரு காவல்துறை கண்காணிப்பாளரை நியமித்து, டிசம்பர்-18ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் பற்றி சிறிதும் கவலைப்படாமல், “மழை நீர்க் கால்வாய், நடைபாதை அமைக்கும் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களில் சென்னை மாநகராட்சியில் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்றுமணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்படுகிறது. ஆனால், பயன்படுத்தப்படுவதோ எம்-சாண்ட் என்று அண்மையில் சென்னையில் உள்ள ஹார்லிஸ் ரோடு நடைபாதையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
ஆற்றுமணலை விட எம்-சாண்ட் நூற்றுக்கு ஐம்பது சதவீதம் விலை குறைவு என்ற நிலையில், கான்கிரீட் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம்-30 வகையின் சந்தை விலை 25 முதல் 30 சதவீதம் ஒப்பந்தங்களில் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதிலும் ஊழல் என்று செய்திகள் வெளிவருகின்றன.

ஆகவே, சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள இந்த, ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட் என்ற 1000 கோடி ரூபாய் ஊழல் குறித்து, உடனடியாக உரிய விசாரணை நடத்தி - மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அமைச்சரையும், அவருக்குத் துணை போகும் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளையும் விரைவில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


Leave a reply