சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 5 முக்கிய நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரிதான் மிகப் பெரியதாகும். 9 கிலோமீட்டர் நீளமும் 24 அடி உயரமும் உள்ள இந்த ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆறுகளில் தண்ணீர் சென்று கடலில் கலக்கும். இந்த ஏரி 500 ஆண்டுகள் பழமையானது. இந்த ஏரி வெட்டப்பட்ட போது, அதன் நீர்மட்டம் 19.5 அடியாக இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 22 அடியாக உயர்த்தப்பட்டது. பின்னர், தெலுங்கு கங்கைத் திட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் நீரைத் தேக்கி வைப்பதற்காக மேலும் இரண்டு அடி உயர்த்தப்பட்டு 24 அடி கொள்ளளவு கொண்ட வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.இந்த ஏரியில் 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள் உள்ளன. இது தவிர 2 ஆயிரம் அடி நீளத்தில் தானாகவே உபரிநீர் வெளியேறும் கலங்கலும் கொண்டது.
இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி ஆகும். ஏரியிலிருந்து விநாடிக்கு 50,000 கன அடி நீரை வெளியேற்றும் திறன் உண்டு. அடையாறு ஆற்றுக்குத் தண்ணீர் வந்து சேரும் பல்வேறு நீர்நிலைகளின் மொத்த பரப்பு 808 சதுர கி.மீ. இதில், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு மட்டும் 358 சதுர கிமீ .ஆண்டு தோறும் குடி நீர் அளித்து சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் இந்த செம்பரம்பாக்கம் ஏரி நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் சென்னை மக்களை மிரட்ட ஆரம்பிக்கும். விடும்.
கடந்த 2015 -இல் சென்னையில் பெய்த பெருமழையால் , வெள்ளம் ஏற்பட்டது. அப்போது செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விடுவதில் அதிகாரிகள் மத்தியில் குழப்பமும் தாமதமும் ஏற்பட்டது.வருவது வரட்டும் என்று சில அதிகாரிகள் ஏரியின் பாதுகாப்பு கருதி திடீரென, 30,000 கன அடி தண்ணீரை அடையாற்றில் திறந்து பிறந்து விட்டனர். இதன் காரணமாகச் சென்னை மாநகரே வெள்ளத்தில் மூழ்கியது. இப்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஏரி மீண்டும் இன்று திறந்து திறந்துவிடப்பட்டுள்ளது. விநாடிக்கு 1,000 கன அடி நீர் தற்போது ஏரியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. கடந்த முறை ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஆட்சியாளர்களுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டது இந்த முறை அவ்வாறு நடந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த முறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.