நேற்று அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் மற்று நெல் ஜெயராமன் அவர்களின் பிறந்த தினம். சனிக்கிழமை மண்ணைப் பற்றி பேசினோம், இன்று மண்ணின் மைந்தர்கள் பற்றி பேசுகிறோம் என்று முத்தாய்ப்பாக சொன்னார். இன்று எவிக்ஷன் டே. சனி அன்று இருந்த உக்கிரம் நேற்று கமலிடத்தில் இல்லை. எவிக்ஷன் தினத்தில் வழக்கமாக நடக்கும் நடைமுறைகள் மட்டுமே நடந்தது. நிகழ்வுகளை கொஞ்சம் முன் பின்னாக பார்ப்போம்.
சனம் எவிக்ஷன்
சம்யுக்தா மற்றும் சனம் இருவரின் எவிக்ஷன் மூலமாக பிக்பாஸ் சொல்ல வரும் செய்தி என்ன? இருவருமே சிறப்பாக தன் பங்களிப்பை செய்தவர்கள். இருவரில் சனம் முதல் நாமினேஷனில் இருந்து ஒரே ஒரு முறை மட்டுமே நாமினேஷனுக்கு வராமல் இருந்தார். இருவருமே டாஸ்க்கில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இருவருமே சக ஆண் போட்டியாளர்களால் பாதிக்கப்பட்டவர்கள். அவமானபடுத்தப்பட்டவர்கள். தங்களுக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள். இவையெல்லாம் அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பொதுவான சம்பவங்கள். அவர்களுடைய தனிப்பட்ட குணாதிசியங்களை ஒப்பீடு செய்யவில்லை.
இந்த வீட்டில் நேர்மறையாக அல்லது எதிர்மறையாக ஏதேனும் சில சம்பவங்கள், செயல்கள் காரணமாக பேசுபொருளாக இருந்தவர்கள் தான் இருவரும். கடந்த 8 வாரத்தில் இந்த விளையாட்டிற்கு ஏதேனும் ஒரு வகையில் சிறப்பான பங்களிப்பை அளித்த இருவர் வெளியேறி இருக்கிறார்கள். ஆனால் எந்த விதத்திலும் தங்களுடைய பங்களிப்பும் இல்லாமல், இந்த வீட்டில் நடந்த பிரச்சினைகளுக்கு எந்த கருத்தும் சொல்லாமல், யாருடனும் பிரச்சினை செய்யாமல் இருக்கும் நபர்களை கணக்கெடுத்தால் ரமேஷ், ஷிவானி, ஆஜித், நிஷா, சோம். இந்த 5 பேரும் இந்த வீட்டிற்கு அளித்த பங்களிப்பு என்ன? எப்படி இவர்க்ச்ள் தொடர்ந்து சேவ் செய்யப்படுகிறார்கள்.
யார் வம்புக்கும் போகாமல், யாருடனும் பிரச்சனை செய்யாமல், இருந்தால் போதுமா? யாராவது இவர்களை தூண்டிவிட்டால் கூட உடனடியாக சரண்டர் ஆகி விடுவார்கள். அப்படியான நபர்கள் தான் இந்த பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கு தகுதியானவர்களா? சம்யுக்தா, சனம் வெளியேற்றம் நமக்கு அதைதான் உணர்த்துகிறது. நீ எதுவுமே செய்யலைனாலும் பரவால்ல, சும்மா இருந்தாலே போதும். அதே மாதிரி வலிமையான போட்டியாளர்களை பகைச்சுக்காம இருந்தா இந்த வீட்டுல நீண்ட நாள் இருக்கலாம். அப்படித்தான் மேற்ச்சொன்ன 5 பேரும் இந்த வீட்டில் இருக்கிறார்கள். அடுத்து பார்டரில் இருப்பது அனிதா என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பாலா, சனம் ரெண்டு பேருமே அடிக்கடி சொல்றா மாதிரி தகுதியான நபர்கள் தொடர்ந்து வெளியேறுகிறார்கள், தகுதியற்ற நபர்கள் தொடர்ந்து காப்பாற்றப்படுகிறார்கள். பைனலுக்கு யார் வர வேண்டும் என்று அடிக்கடி லிஸ்ட் எடுக்கிறார்கள். ஆரி, பாலா, அர்ச்சனா, அனிதா, சம்யுக்தா, சனம், ரியோ இந்த 7 பேர் தான் தகுதியானவர்கள். இதில் இப்போது 2 பேர் இல்லை. அனிதா இன்னும் ஒரு வாரம் தாண்டினாலே அதிகம் தான். மேற்கண்ட 7 பேரும் இறுதி வாரங்களில் இருந்தால் இந்த சீசன் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால் எந்த பங்களிப்பையும் கொடுக்காதவர்களில் சிலர் தான் பைனலில் இருக்கப் போகிறார்கள். இதை தான் பிக்பாஸ் டீமும், கமல் சாரும் விரும்புகிறார்களா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
சனம்
முந்தைய பிக்பாஸ் சீசன்களில் இடம் பெற வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தவர் சனம். இதை அவரே பல முறை சொல்லியிருக்கிறார். கடும் முயற்சிகளுக்கு பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்பு. இந்த வாய்ப்பை அவர் பெரிதும் நம்பி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 20 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் ஒரு வெற்றியை கூட பார்க்காதவர் என்பதில் அவருக்கு மிகப்பெரிய வருத்தமும், கோபமும் இருக்கிறது. வயதும் வேறு கூடிக் கொண்டே போவதால் ஒரு கையறு நிலையில் தான் பிக்பாஸ் வந்திருக்கிறார்.
பிக்பாஸ் வருவதற்கு முன்னரே அவர் சர்ச்சை நாயகி. சமூக வலை தளங்களில் அவருக்கு அறிமுகம் இருக்கிறது. ஆனாலும் மக்களின் பெரும் ஆதரவை பெறும் பாக்கியம் அவருக்கு கிடைக்கவில்லை. பாலாவிற்கு கிடைத்தது போல் ஒரு ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் அவருக்கு இருக்கிறது. அவரும் மாடலிங் துறையை சேர்ந்தவர் என்பதால் பாலா, சம்யுக்தா உடன் ஏற்கனவே அறிமுகம் உள்ளவர். சனம் அழகி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது உயரம் தான் அவரது மைனஸ். இவ்வளவு உயரமான எந்த நாயகியும் தமிழ் சினிமாவில் நிலைத்ததே இல்லை. தமிழ் ரசிகர்களின் ரசனையிலும் உயரமான பெண்களுக்கு இடம் இல்லை என்பதும் உண்மை. மேலும் நடனம் ஆடத் தெரியாதது இன்னொரு குறை. அவருக்கு நேர்ந்த விபத்தினால் கூட இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம்.
இந்த வீட்டை பொறித்தவரை சனமிடம் இருந்த மிகப்பெரிய குறை அவரது புரிதல். எதையும் உடனடியாக புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் அவரிடத்தில் இல்லை. பேசிய வார்த்தைகளை கொஞ்சம் ப்ராசஸ் செய்து, அதன் முழு அர்த்தத்தையும் உணர்ந்து, அந்த அர்த்தம் தனக்கு எவ்வாறு பொருந்தும் என்று யோசித்து தான் அவரால் விளங்கிக் கொள்ள முடியும். மொழி ஆளுமையும் இதற்கு ஒரு காரணமாகச் சொன்னாலும், இயற்கையாகவே அவருக்கு இந்த குறைபாடு இருக்கிறது. ஆனால் தன்னுடைய பலவீனத்தையே பலமாக மாற்றியவர் சனம்.
யார் என்ன பேசினாலும் அதை பற்றி பலமாக யோசிக்கிறார். தவறு என்று மனதில் பட்டால் யாராக இருந்தாலும் எதிர்த்து நியாயம் கேட்கிறார். ஆனால் அந்த விவாதத்தை முடிக்கவே விடாமல் நீட்டிக் கொண்டே செல்வது தான் எல்லாருக்கும் எரிச்சல் தரும் விஷயம். எவராலும் கன்வின்ஸ் செய்ய முடியாதவராக தன்னை காட்டிக் கொள்கிறார். அதனால் பலரும் அவரை விட்டு விலகியே இருக்கிறார்கள்.
சுரேஷ், ரேகாவிற்கு பிறகு இந்த வீட்டின் சீனியர்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆரி, அர்ச்சனா, சனம், ரமேஷ் 4 பேரும் தான். ஆரி, அர்ச்சனாவின் கருத்துக்களுக்கு கிடைக்கும் மதிப்பு தன்னுடைய கருத்துக்களுக்கு கிடைப்பதில்லை என்ற மனக்குறை சனத்திடம் உண்டு. (ரமேஷுக்கு இங்கு கிடைப்பது வேறு விதமான மரியாதை). தன்னுடைய குரல் கவனிக்கப்பட வேண்டும், தன் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் ஆரம்பம் முதலே உறுதியாக இருந்தார் சனம். தேவையில்லாத இடத்தில் தன் கருத்தைச் சொல்கிறார் என்பது தான் இவர் மீது போடப்பட்ட வழக்கு. இப்போது வரை அர்ச்சனாவின் குற்றச்சாட்டும் இது தான். ஆனால் சொல்ல வரும் கருத்துக்கள் ஷார்ப்பாக இல்லாமல் போவதால் பலரும் இவர் கருத்தை மதிப்பதில்லை. அது போன்ற பேச்சுக்களால் கூட சில சந்டைகள் நடந்தது. நம்மை புறக்கணிக்கிறார்கள் என்பது சனமிற்கு நன்றாக தெரிகிறது. அதனால் ஏற்படும் மன அழுத்தம் தான் அவர் கவன ஈர்ப்புக்காக நடத்திய சில சம்பவங்கள்.
அதே சமயம் தைரியமாக தன் கருத்தை எடுத்து வைப்பதில் இருந்து பின்வாங்கவே இல்லை. பொதுவான விஷயங்களில் அவரது கருத்தில் நேர்மை இருந்தது. மற்றவர்கள் வேடிக்கை பார்த்த போது கூட இவர் பேசிக் கொண்டு தான் இருந்தார்.
அவர் நாமினேஷனில் இல்லாத வாரத்தில் தான் அவருடைய இந்த நேர்மையான பக்கம் வெளிப்பட்டது. இந்த வீட்டில் இருக்க தான் தகுதியான நபர் என்பதை பல இடங்களில் நிரூபித்திருக்கிறார். அவரது நடனத்தை மிஸ் பண்ணப் போகிறோம் என்று நினைக்கும் போது தான் வருத்தமாக இருக்கிறது.
இனி நேற்றைய நிகழ்வு
நிகழ்ச்சியின் துவக்கத்தில் நேற்று தனக்காக பேசியதற்கு நன்றி சொன்னார் சனம்.
ரெண்டாவது போன் காலை பேசி முடித்துவிட்டதால் சனம் எடுத்துக் கொண்ட ரேங்கிங் பற்றி கருத்து கேட்டார். அது சரி என்று ஆரி உட்பட சிலர் கைதூக்கினார்கள். அதில் பாலாவும் இருந்தது ஆச்சரியம். ஊரோடு ஒத்து வாழத் துவங்கி விட்டார் போல.
"ஜாலியா உக்காந்து வேர்கடலை சாப்பிட்டுகிட்டே ஜெயிக்கனும்னு நினைக்கறாங்கனு" பாலா எப்பவோ சொல்லிருக்கார் போல. அதை பத்தி கேக்கவும் பாலா முழிச்சாரு. "அய்யோ இதுல என்ன பஞ்சாயத்தை கூட்டப் போறாங்களோனு தெரியலையே" என்ற வடிவேலு ரியாக்சன் அது. கமல் சாரே சிரித்து விட்டார். எப்ப சொன்னேன்னு தெரியலை சார்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டாரு பாலா. ஆனா சொல்லும் போது பக்கத்துல இருந்த அனிதா அதை பற்றி பேசினார். ரமேஷ், நிஷா போன்றவர்கள் தான் அந்த வேர்க்கடலை சாப்பிடுபவர்கள்.
அதை சொன்னவுடன் ரமேஷிற்கு கோபம் வந்து அனிதாவிடம் சண்டைக்கு போனார். கமல் சாரும் அதை அனுமதித்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்.
ஹெல்த் செக்கப் சென்று வந்ததை பற்றி கேட்க மொத்த பேரும் வெடித்துச் சிரித்தார்கள். ரகசியத்தை அப்படியே மெயிண்டெயின் செய்து விட்டார்.
பாஸ் அர்ச்சனா மேட்டர் விவாதிக்கப்பட்டது. யார் அந்த பேரை வச்சாங்கனு தெரியலனு பேசிட்டு இருந்தாங்க அர்ச்சனா.
இந்த சீசனில் முதல் முறையாக "காலர் ஆப் தி வீக்" விழுப்புரம் அருணாச்சலம் வந்தார். முதல் கால் ஷிவானிக்கு. "எந்த நம்பிக்கையில் நாமினேஷனுக்கு வந்தீங்க." என்ற கேள்விக்கு ஷிவானியின் பதில் தெளிவாகவே இருந்தது. ஆடியன்ஸ் இருக்கும் போது அவங்களோட கைதட்டல் அளவை வச்சு நமக்கான வரவேற்பு பத்தி தெரிஞ்சுக்கலாம். இந்த தடவை அந்த மாதிரி இல்லேங்கறதால் நாமினேஷன் போய் சேவ் ஆகும் போது அதை பத்தி தெரிஞ்சுக்கலாம்னு வந்ததா சொன்னாங்க. இந்த பொண்ணுக்குள்ளேயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்.
நேற்று கொஞ்சம் ஜாலி மூடில் தான் இருந்தார் கமல் சார். இடையிடையே ரம்யாவை வம்புக்கு இழுத்துக் கொண்டே இருந்தார்.
ஆஜித், நிஷா சேவ் செய்யப்பட அனிதா, சனம், ஷிவானி மூவரும் இறுதியாக இருந்தனர். இறுதியில் சனம் வெளியேற்றப்பட்டார். ஆரி சொன்னது போல், சனம் இங்கு விளையாடத் தகுதியானவர். எவிக்ஷனுக்கு முன் யார் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு அனிதா வெளிய போவாங்கனு எப்பவும் போல ரிவர்ஸில் பதில் சொன்னார் ஆரி. அனிதாவும் இதை நோட் பண்ணிருப்பாங்க இல்ல.
இந்த வாரம் எப்படி போகப் போகது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.