பெங்களூருவில் தொழில்நுட்ப கம்பெனியை சேர்ந்த ஊழியர்கள் 7 பேர், கடந்த 3 மாதங்களாக சம்பளம் தராத தங்களது முதலாளியை கடத்தி.. சித்ரவதை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூருவில் ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொழில்நுட்ப கம்பெனியை நடத்தி வந்தவர் சுஜய். இவரது கம்பெனியில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சுஜய், சம்பளம் வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பிசினஸ் சரியாக போகவில்லை என்றும், விரைவில் சம்பளத்தை வழங்குவதாகவும் கூறி வந்துள்ளார்.
ஆனால், 3 மாதங்களாக சம்பளம் கிடைக்காத விரக்தியில் இருந்த 7 ஊழியர்கள், முதலாளி சுஜய்யை சந்தித்து பேச வேண்டும் என்று அவரை ஒரு பொதுவான இடத்திற்கு வரவழைத்து, அங்கிருந்து சாதூர்யமாக அவரை கடத்தி ஒரு தோப்பு வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை கொடுத்துள்ளனர். சித்ரவதை தாங்க முடியாத சுஜய், அவர்களுக்கான சம்பளத்தை தருவதாக உறுதியளிக்க, சுஜய்யை அவர்கள் விடுதலை செய்துள்ளனர்.
முதலாளி சம்பளம் கொடுத்து விடுவார் என நம்பியிருந்தவர்கள் ஹலசுரு போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.
விடுதலையான சுஜய், வீட்டிற்கு சென்று அவமானம் தாங்க முடியாமல் தூக்குப் போட்டுக் கொண்டார். வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், கடத்தல் விபரம் அறிந்து, அந்த 7 ஊழியர்களில் சஞ்சய், ராகேஷ், நிரஞ்சன் மற்றும் தர்ஷன் ஆகிய நான்குபேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது ஆள்கடத்தல், தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.