பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு முதல் செய்த வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஏர் இந்தியா மத்திய அரசுக்கு பில் அனுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 -ம் ஆண்டு பதவி ஏற்றார். பிரதமராக பதவியேற்றதில் இருந்து வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அடிக்கடி அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது சர்ச்சையானது. ஆட்சிக்கு வந்தது முதல் பிரதமர் இந்தியாவிலிருந்ததை விட வெளிநாடுகளில் தான் அதிகம் இருந்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் செய்தன. பிரதமராகப் பதவி ஏற்ற முதல் ஆண்டிலேயே (ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை) 20 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்காக ரூ.37.22 கோடியை மத்திய அரசு செலவிட்டது. ஆனால் பாஜகவோ இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்தவே பிரதமர் வெளிநாடுகளுக்கு பயணிக்கிறார் எனக் கூறி வந்தனர்.
இந்நிலையில் 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு நாடுகளுக்கு 44 பயணங்கள் சென்றுள்ளார் என்றும் இதற்காக 443.4 கோடி ரூபாய் கட்டணம் ஆகியுள்ளது எனவும் கூறி பிரதமர் அலுவலகத்துக்கு ஏர் இந்தியா விமானம் நிறுவனம் பில் அனுப்பியுள்ளது. இந்த தொகையானது முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டுப் பயண செலவை விட குறைவாக இருக்கிறது. மன்மோகன் சிங் 5 வருடத்தில் 38 முறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். அதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.493 கோடி.
மன்மோகன் சிங்கை விட கிட்டத்தட்ட 50 கோடி எப்படி குறைவானது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளன. அதாவது, ஒரே பயணத்தில் ஆறு நாடுகளுக்கு சென்றது, இரண்டு நாடுகளுக்கு மேல் சென்றது என மொத்தம் 44 பயணங்களை மேற்கொண்டுள்ளார் மோடி. இந்த 44 பயணங்களை தவிர்த்து சிங்கப்பூர், ஈரான் போன்ற மேலும் ஆறு வெளிநாடுகளுக்கு மோடி சென்றுள்ளார். அந்தப் பயணங்களை இந்தியன் ஏர் போர்சுக்குச் சொந்தமான போயிங் 737 பிசினஸ் ஜெட்டில் பயணம் செய்து இருக்கிறார். இதேபோன்று ஒரே ட்ரிப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல நாடுகளுக்குச் செல்வது, அவ்வப்போது ஏர் போர்ஸ் விமானத்தை பயன்படுத்தியது போன்றது காரணமாகவே ஏர் இந்தியாவுக்கான கட்டணம் குறைந்துள்ளது.