Saturday, Feb 27, 2021

சென்னை மக்களே உஷார்... தேர்தல் களேபரத்தில் பகல் கொள்ளையர் உலா?

Ahead of poll, robbery groups targetting lonely apartments in chennai

by எஸ். எம். கணபதி Apr 16, 2019, 10:00 AM IST

சென்னையில் தேர்தல் களேபரத்தில் போலீசார் மும்முரமாக இருக்க, பகல் கொள்ளையர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை குறி வைத்துள்ளனர். எனவே, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்களே, மிகவும் உஷாராக இருங்கள்!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பீரோ புல்லிங் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்து வந்தனர். அதன்பிறகு, பீகார், மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்த வடநாட்டுக்கார்கள், நகைக்கடைகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து சென்றனர். இதே போல், ஆள் அரவமில்லாத பகுதிகளில் நடந்து செல்லும் வயதான பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் எல்லா இடங்களையும் முழு அளவில் ‘கவர்’ செய்யும் அளவுக்கு சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் பயனாக, பல கொள்ளையர்களும், செயின் பறி்ப்பாளர்களும் சிக்கியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், தற்போது சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பகலில் கொள்ளையடிக்கும் கும்பல்கள் சுற்றி வருகின்றன. தேர்தல் பணியில் போலீசாரின் கவனம் முழுமையாக திரும்பியுள்ள நிலையில், அந்த களேபரத்தில் கொள்ளையடிக்க இந்த கும்பல் திட்டமிட்டிருக்கின்றன. இதை அந்த கொள்ளைக் கும்பலின் குறியீடுகள் வெளிக்காட்டியிருக்கின்றன. எனவே, சென்னை மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

கொள்ளைக் கும்பல், செக்யூரிட்டி இல்லாத குடியிருப்புகளை தேர்வு செய்து நோட்டம் விடுகின்றனர். முதலில் மூன்று, நான்கு பெண்கள் மொத்தமாக குடியிருப்புக்குள் நுழைவார்கள். ஆளுக்கொரு வீ்ட்டுக்கு சென்று, ‘‘ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வருகிறோம். உங்களிடம் பழைய துணிகள் இருந்தால் கொடுங்கம்மா...’’ என்று கெஞ்சுவார்கள். அப்படியே வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நோட்டமிடுவார்கள். அடுத்த நாள், மூன்று நான்கு ஆண்கள் வந்து சுவரில் சாவி அல்லது ஒரு பேனாவை வைத்து கிறுக்குவார்கள். நீங்கள் யாராவது பார்த்து கேட்டால், ‘‘இது மேஜிக் பென், இதை வைத்து எழுதினால் இருட்டிலும் நன்கு தெரியும். இதன் இன்னொரு முனையில் உள்ள அழிப்பான் மூலம் அதை அழிக்கவும் செய்யலாம்’’ என்று காட்டுவார்கள்.


அப்படி அவர்கள் எழுதியதை நீங்கள் யாரும் கவனிக்காவிட்டால், ஒவ்வொரு மாடியாகச் சென்று ஏதோ எழுதி விட்டு செல்வார்கள். அதை உன்னிப்பாக பார்த்தால் அவர்களின் குறியீடுகள் புரியும். அதாவது ஒரு வீட்டில் பகலில் 2 பேர் மட்டும் இருந்தால் அந்த வீட்டுச் சுவரில் 2 ஸ்டார் வரைந்திருப்பார்கள். அந்த குடியிருப்பில் சி.சி.டி.வி இருக்கிறது என்பதை குறிக்க இரண்டு கண்கள் வரைந்திருப்பார்கள். வேற ஏதாவது ஒரு இடத்தில், ‘‘ஈசியாக டைவர்ட் பண்ணலாம். ஒன்றும் இல்லை, வா, வீட்டுக்கு...’’ என்று எழுதியிருப்பார்கள். அதையெல்லாம் உற்று நோக்கினால் மட்டுமே கண்ணுக்கு தெரியும்.

இந்த குறியீடுகள் வரைந்து விட்ட பின்பு, அடுத்த நாள் இன்னொருவர் வந்து பார்ப்பார். இப்படியே மூன்று, நான்கு முறை வந்து நோட்டமிடுவார்கள். அதற்குள் யாரும் கண்டுபிடிக்கவில்லை என்று தெரிந்தால் அடுத்து சி.சி.டி.வி. ஒயரை வெட்டி விடுவார்கள். மறுநாள், கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றுவார்கள். கடந்த வாரம், மேற்கு மாம்பலத்தில் ஒரு குடியிருப்பில் எழுதப்பட்ட இந்த குறியீடுகளை கண்டுபிடித்து சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதனால், போலீசாரும் ரோந்துப் பணியை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். தற்போது சில குடியிருப்புகளில் ‘அலர்ட்’ என்று கொள்ளைக்காரனுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் எழுதியிருக்கிறார்கள்.
இருந்தாலும், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் எதற்கும் தயாராக மிளகாய்ப்பொடி, உருட்டுக்கட்டை போன்ற தற்காப்பு ஆயுதங்களுடன் மிகவும் உஷராக இருக்க வேண்டும்.

You'r reading சென்னை மக்களே உஷார்... தேர்தல் களேபரத்தில் பகல் கொள்ளையர் உலா? Originally posted on The Subeditor Tamil

More Crime News

அதிகம் படித்தவை