சேந்தமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ப்ளஸ் 1 படிக்கும் மாணவி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியம் பேளூக் குறிச்சி அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த செங்கோட்டையன்- சிந்தாமணி தம்பதியின் மகள் செல்வி (வயது 17). இவர் பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் செல்விக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் திருமணம் நடந்ததாக தெரிகிறது. அந்த தகவலை யாரோ நாமக்கல் குழந்தைகள் நல அலுவலருக்கு தெரிவித்துள்ளார். கிடைத்த தகவலின்பேரில், செல்வி மற்றும் உறவினர்களை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் செல்வியை நாமக்கல் காப்பகத்தில் தங்க வைத்தனர்.
அதன்பிறகு, செல்வி தனது உறவினர் வீடான தம்மநாயக்கனூருக்கு சென்று தங்கினார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று அந்த வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் செல்வி மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த பேளூக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவி செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தை திருமணம் மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.