புதுடெல்லி: பள்ளி கழிப்பறையில் பிணமாக கிடந்த மாணவர் மரணம் தொடர்பாக உடன் பயின்ற மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகிழக்கு டெல்லி, கார்வால் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு 9ம் வகுப்பு படித்து வரும் மாணவர் நேற்று முன்தினம் கழிவறையில் மர்மமான முறையில் இறந்துக் கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி நிர்வாகிகள், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது, பள்ளியில், இறந்த மாணவருடன் சக மாணவர்கள் சண்டை போட்டுள்ளனர் எனவும், இதனால் ஏற்பட்ட தகராறில் மாணவரை கடுமையாக தாக்கியதில் இறந்துள்ளதாகவும் மாணவரின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.
ஆனால், பள்ளி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்ததை அடுத்து, மாணவன் டயரியா எனும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது, பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்தனர். அதில், மாணவர் கழிவறைக்குள் சென்றதும் உடன் 4 மாணவர்கள் பின்தொடர்ந்து செல்வது போன்று பதிவாகி இருந்தது. இதன் பிறகு, மாணவரை சக மாணவர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்து இறந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதனால், சந்தேகத்தின்பேரில் உடன் பயின்று வந்த மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான ஒரு மாணவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.