சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஓரே நாளில் பல வீடுகளில் திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அம்பத்தூர் சூரப்பட்டு, மதுரை மேட்டூர், 4வது தெருவை சேர்ந்தவர் அற்புதம்மாள் (80). விதவை. தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு காற்றோட்டத்திற்காக அற்புதம்மாள் கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, இவரது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 5 சவரன் நகைகள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிந்தது.
இதேப்போல், அம்பத்தூர் ஐசிஎப் காலனியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி புஷ்பா (64). இவர்களது வீட்டில் வைத்திருந்த 11 சவரன் நகைகள் நேற்று திடீரென மாயமானது. இதுகுறித்த புகார்களின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனாம்பேட்டை வாசன் தெருவை சேர்ந்தவர் சங்கர் (65), ரியல் எஸ்டேட் புரோக்கர். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தூங்குவதற்கு முன்பு தனது 2 சவரன் மோதிரத்தை மேஜையில் கழற்றி வைத்துவிட்டு, காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கி உள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது மேஜையில் வைத்திருந்த மோதிரம் மாயமாகி இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து வீடுகளில் திருட்டு சம்பவம் நடப்பதால் பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். அதேசமயம் இரவு நேரத்தில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.