தமிழகத்தில் போக்குக் காட்டிய ஃபானி புயல் ஒரிசாவை நாசம் செய்து விட்டது.இன்று காலை 9 மணியளவில் அதிதீவிர புயலாக பூரி அருகே மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது ஃபானி புயல். புயலின் தாக்கம் மேலும் 6 மணி நேரத்திற்கு இருக்கும் என்பதால் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்லப்பட்டுள்ளது.
வங்கக் கடலின் தென்கிழக்கில் கடந்த வாரம் உருவான ஃபானி புயல் தமிழகத்தை குறி வைத்து நகர்ந்ததால் கடந்த ஏப்ரல் 29, 30 தேதிகளில் வட மாவட்டங்களைத் தாக்கும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் போக்குக் காட்டி திசை மாறிய புயல் ஒடிசா நோக்கிச் சென்றது. அதி தீவிரப்புயலாக மாறி ஒடிசாவில் இன்று காலை கரையைக் கடக்கும் என்று முன்னெச்சரிக்கை விடப்பட்டதால் ஒடிசா மாநில அரசு, புயல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு அனைத்து துறையினரையும் முடுக்கிவிட்டு புயலைச் சந்திக்க தயாரானது. ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்,
ஒடிசாவில் ரெட் அலர்ட் விடப்பட்டு சாலை, ரயில், விமானப் போக்குவரத்தும் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதுடன், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு அதிதீவிரப் புயலான ஃபானி , ஒடிசாவின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே ஃபோனி புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. 9 மணி அளவில் பூரி அருகே இந்தப் புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 230 கி.மீ வேகத்தில் புயல் காற்றுடன் பலத்த மழையும் கொட்டியது.
இந்த அதி தீவிரப் புயல் கரையைக் கடந்த பின்னும் அதன் தாக்கம் மேலும் 6 மணி நேரத்திற்கு இருக்கும் என்பதால், புயல் மற்றும் மீட்புப் பணிகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளது. ஒடிசா வரலாற்றில் கடந்த 1999-ல் இது போன்ற அதிதீவிரப் புயல் மணிக்கு 270 கி.மீ வேகத்தில் தாக்கியதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் அரங்கேறியது. 20 ஆண்டுகளுக்குப் பின் அது போன்று தற்போது ஃபானி புயல் நாசம் செய்துள்ளது. ஆனாலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அதிக உயிர்ச்சேதம் இல்லாமல் தவிர்க்கப்படும் என்றே தெரிகிறது.