சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 50வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது.
காயம் காரணமாக கடந்த போட்டியில் தோனி பங்கேற்காததால், சென்னை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. அதனால், காயத்தை பொருட்படுத்தாமல் அணியின் வெற்றிக்காக நேற்றைய போட்டியில் மீண்டும் களமிறங்கினார் தோனி.
ஆனால், டாஸில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்து சென்னை அணியை சுருட்ட நினைத்தது. ஆனால், அவர்களிடம் நேற்றைய போட்டியில் ரபாடா இல்லாதது ஒரு ஆறுதல்.
ஷேன் வாட்சன், டு ப்ளசிஸ் முதலில் களமிறங்கினர். 4 ஓவர் வரை 4 ரன்கள் என்ற நிலையில், 9 பந்துகளை ஏப்பம் விட்டு ஷேன் வாட்சன் சுசித் பந்தை தூக்கி அடித்து பழமான கேட்சை அக்ஸார் கையில் கொடுத்து டக் அவுட் ஆகி பெவிலியன் சென்றார்.
அடுத்ததாக சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். டு ப்ளசிஸ் மறுமுனையில் பந்துகளை வீண் அடித்தாலும், அப்பப்போ பவுண்டரிகளை எடுத்துக் கொடுத்தார்.
மறுமுனையில் சுரேஷ் ரெய்னா, தனது பழைய ஸ்டைல் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 41 ரன்கள் அடித்த நிலையில் டு ப்ளசிஸ் அவுட் ஆக, கேப்டன் தோனி களமிறங்கினார்.
37 பந்துகளை எதிர்கொண்ட ரெய்னா 8 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் விளாசி 59 ரன்கள் எடுத்த நிலையில் சுசித் பந்துவீச்சில் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
சென்னை அணியின் ரன் 150ஐ தொடுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தோனி மற்றும் ஜடேஜா ஜோடி அதிரடி காட்டியது. 10 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசிய ஜடேஜா 25 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
மறுமுனையில் கலக்கிக் கொண்டிருந்த தோனி, 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் விளாசி இறுதிவரை அவுட் ஆகாமால் 44 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 179 ரன்கள் எடுத்தது.
180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு சென்னை அணியின் சுழல் பந்து வீச்சாளரான இம்ரான் தாஹீர் மற்றும் ஜடேஜா சிம்ம சொப்பனமானார்கள்.
டெல்லி அணியில் அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களுடன் பெவிலியன் திரும்பினர்.
பிரித்வி ஷா 4 ரன்கள் எடுத்த நிலையில் தீபக் சாஹர் முதல் விக்கெட்டை எடுத்தார். அதிரடி ஆட்டக்காரர் தவான் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்பஜன் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்புடன் விளையாடி 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கில் அவுட் ஆனார். ஜடேஜா மேலும் கோலின் இங்ராம், கிறிஸ் மோரிஸ் விக்கெட்டுகளை சாய்தார்.
ரிஷப் பந்த், அக்ஸர் படேல், ரூதர்ஃபோர்ட், அமித் மிஷ்ரா என 4 வீரர்களின் விக்கெட்டுகளை இம்ரான் தாஹீர் கைப்பற்றினார்.
ஜடேஜா, இம்ரான் தாஹீர், ஹர்பஜன் சிங் பந்துவீச்சின் காரணமாக டெல்லி அணி 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த வெற்றியின் மூலம் மீண்டும் புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடம் பிடித்தது. 16 புள்ளிகளுடன் டெல்லி அணி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆட்ட நாயகன் விருது கேப்டன் தோனிக்கு வழங்கப்பட்டது.