பொள்ளாச்சி போல் பெரம்பலூரில் நடந்த பாலியல் வன்கொடுமையை அம்பலப்படுத்திய வக்கீலை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபல அரசியல் பிரமுகரை காப்பாற்ற முயற்சிக்கும் விதமாக வக்கீலின் செல்போனில் இருந்த ஆடியோ, வீடியோ ஆதாரங்களை போலீசார் அழித்ததாக பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட எஸ்பி திஷா மித்தலிடம் கடந்த மாதம் 21ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான அருள், புகார் ஒன்றை கொடுத்தார். அதில், ‘‘பொள்ளாச்சி நடைபெற்ற கூட்டு பாலியல் வன்புணர்வை போன்று, பெரம்பலூரிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரம்பலூர் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகருக்கும், போலி நிருபர் உட்பட சிலருக்கும் தொடர்பு உள்ளது’’ என்று கூறியிருந்தார்.
தனது புகார் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் 25ம் தேதி பாதிக்கப்பட்ட பெண், தன்னிடம் பேசிய ஆடியோவை அருள் வெளியிட்டார். அதில் பாதிக்கப்பட்ட பெண், தனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ஓட்டலுக்கு இன்டர்வியூவுக்கு அழைத்து ஆபாசமாக வீடியோ எடுத்து, இந்த வீடியோவை அழிக்க வேண்டும் என்றால் அதிமுக எம்எல்ஏவின் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டினர் என கூறி கதறி அழுதுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வழக்கறிஞர் அருளை பெரம்பலூர் தனிப்படை இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி திடீரென கைது செய்தார். பின்னர், அன்று இரவு 8.00 மணிக்கு பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் அருளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 9.30 மணியளவில் மருத்துவ பரிசோதனை முடிந்தது.
பிறகு வழக்கறிஞர் அருள் கூறியதாவது: இதுவரை என் மீது என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றே தெரியவில்லை.
போலீசார் பதில் சொல்லவும் இல்லை. கைது செய்தவுடன் என் செல்போனை பறித்த போலீசார் அதிலிருந்த சில வழக்கு தொடர்பான வீடியோ, ஆடியோ ஆதாரங்களை டெலிட் செய்து விட்டனர். இதனை 3 நாட்களுக்கு முன்பே எதிர்பார்த்தேன். நாங்கள் சரியான பாதையில் தான் செல்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பயந்து கொண்டு, காவல்துறை அடிமையாக நடந்து என்னைக் கைது செய்திருக்கிறது’’ என கூறினார். மருத்துவ பரிசோதனை முடிந்து, வக்கீல் அருள் பெரம்பலூர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்.
பின்னர், வழக்கறிஞர்கள் நல சங்கத்தை சேர்ந்த காமராசு (51) கொடுத்த புகாரின்பேரில், அருள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர். பின்னர், அங்கிருந்து அவரை ஜீப்பில் ஏற்றியபோது, வக்கீல் அருள் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தகுந்த ஆதாரங்கள் இன்றி என்னை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டப்படி வெளியே வந்து பெரம்பலூரில் நடந்த பாலியல் வழக்கை மீண்டும் சந்திப்பேன்’’ என்றார். பின்னர், போலீசார் நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் வக்கீல் அருள் புகாரின்பேரில் அதிமுக பிரமுகர் என்று குறிப்பிட்டு 3 பிரிவின் கீழ் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து இருந்தனர். இதன் பின்னர், வக்கீல் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண் ஆடியோவில் அதிமுக எம்எல்ஏவின் பெயரை சொல்லியும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை. வழக்குப்பதிவும் செய்யவில்லை. ஆடியோவில் பேசிய பெண்ணிடமும் விசாரிக்கவில்லை.
மாறாக இந்த ஆடியோ வக்கீல் அருளால் உருவாக்கப்பட்டது என்று போலீசார் கூறி வருவதாக தகவல். ஆளும்கட்சியினரின் அழுத்தத்தால் இந்த விவகாரத்தை மூடி மறைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்களோ என்ற ஐயம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘‘போனில் பேசிய பெண் இதுவரை புகார் தரவில்லை’’ என்றனர். அதிமுக எம்எல்ஏவை காப்பாற்ற போலீசார் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.