அருண் ஜெட்லி மறைவுக்கு அஞ்சலி கறுப்பு பட்டை அணிந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

by Nagaraj, Aug 24, 2019, 21:34 PM IST

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். வழக்கறிஞர், அரசியல்வாதி என்பதைத் தாண்டி விளையாட்டுத் துறையிலும் குறிப்பாக கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தியவர் ஜெட்லி. டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகள் இருந்தவர். அப்போது சேவாக், காம்பீர், இஷாந்த், தற்போதைய கேப்டன் கோஹ்லி, ஷிகர் தவான் போன்றோர் இந்திய அணியில் இடம் பிடிக்க பெரிதும் காரணமாக இருந்தவர்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத்தலைவராக 2009-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அருண் ஜெட்லி, சிறந்த ஆலோசனைகளையும், பல்வேறு மாற்றங்களையும் கொண்டு வந்தவர்.

இந்நிலையில் அவருடைய மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அருண் ஜெட்லியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான இன்று இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி இந்திய வீரர்கள் தோள்பட்டையில் கருப்பு பட்டை அணிந்து, போட்டி தொடங்கும் முன் மைதானத்தில் அஞ்சலியும் செலுத்தினர்.

மேலும், அருண் ஜெட்லியின் மறைவுக்கு,இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளர். அதில் அருண் ஜெட்லியின் மறைவுச் செய்தி அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த நண்பராக திகழ்ந்தவர். எப்போதும் அனைவருக்கும் உதவத் தயாராக இருந்தவர். 2006-ம் ஆண்டு எனது தந்தை மறைவின் போது, எனது இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு இரங்கல் தெரிவித்துச் சென்றார். அருண் ஜெட்லியின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று கோஹ்லி பதிவிட்டுள்ளார்.


More Crime News