மத்தியில் முந்தைய மோடி அரசில் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை இணை அமைச்சராக இருந்தவர் அல்போன்ஸ் கண்ணந்தானம். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர். 2006ம் ஆண்டு இவர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து அரசியலுக்குள் நுழைந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காஞ்சிரப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இதன் பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி 2011ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். தொடர்ந்து இவர் கடந்த மோடி அரசில் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இம்முறையும் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என கருதினார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அல்போன்ஸ் கண்ணந்தானம் தனது மனைவி மற்றும் 91 வயதான தாய் ஆகியோருடன் டெல்லியில் வசித்து வருகிறார்.இந்நிலையில் இவரது தாய்க்கு கடந்த மே 28ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு மேல் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 10ம் தேதி மருத்துவமனையில் வைத்து அவர் மரணமடைந்தார். இதையடுத்து அல்போன்ஸ் கண்ணந்தானம் தனது தாயின் உடலை விமானம் மூலம் கோட்டயத்திற்கு கொண்டு சென்று சர்ச் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தார். அதற்கு முன்பாக அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா பாதித்து இறந்ததை மறைத்து அல்போன்ஸ் கண்ணந்தானம் தனது தாயின் உடலை அடக்கம் செய்ததாக கோட்டயத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான ஜோமோன் என்பவர் புகார் செய்தது பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதை அல்போன்ஸ் கண்ணந்தானம் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பது: கடந்த மே 28ம் தேதி எனது தாய்க்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தோம். 91 வயதான அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன் பலனாக அவரது உடல் நலம் தேறியது. ஜூன் 5ம் தேதி நடத்திய பரிசோதனையிலும், பின்னர் 10ம் தேதி நடத்திய பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என தெரியவந்தது. ஆனாலும் கொரோனா பாதிப்பால் அவரது உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சிறுநீரகங்கள் செயலிழந்தன. இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஜூன் 10ம் தேதி இறந்தார். இறந்த பின்னர் நடத்திய பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின்னரே அவரது உடலை கேரளா கொண்டு சென்று அடக்கம் செய்தோம். தற்போது என் மீது கூறப்பட்டுள்ள புகார் திட்டமிட்டு பரப்பப்படுவது ஆகும். இவ்வாறு அவர் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.