கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது. கனமழை பெய்து கொண்டிருந்த போது தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் வழுக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுச்சுவரை இடித்து தள்ளி 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது. இந்த பயங்கர விபத்தில் 19 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 170க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்த இடத்தை பார்வையிடுவதற்காக மறுநாள் கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் ஆரிப் முகம்மது கான், மத்திய சிவில் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி. கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் 7 கேரள அமைச்சர்கள் சென்றனர். விபத்து நடந்த உடனேயே மலப்புரம் மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணன், எஸ்பி கரீம், ஏ எஸ் பி ஹேமலதா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
மறுநாள் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் விஐபிகள் சம்பவ இடத்தை பார்வையிட வந்தபோது கலெக்டர் உள்பட அதிகாரிகள் அனைவரும் அவர்களுடன் இருந்தனர். இந்நிலையில் கலெக்டர் கோபாலகிருஷ்ணன், எஸ்பி கரீம் உள்பட 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து இவர்களுடன் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களான சைலஜா, ஜெயராஜன், சுனில்குமார், மொய்தீன், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன், சசீந்திரன் மற்றும் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் சுய தனிமையில் சென்றனர்.
இந்நிலையில் இவர்கள் அனைவருக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் 7 அமைச்சர்களின் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. ஆனாலும் 14 நாள் தனிமையில் இருந்த பிறகே இவர்கள் தங்களது அலுவலங்களுக்கு செல்ல தீர்மானித்துள்ளனர். அதுவரை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தங்களது வீடுகளிலிருந்து பணிகளை செய்து வருவார்கள்.