சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல தொழில்கள் முடங்கிப் போய் விட்டன. ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்கள், பஸ், ரயில் போக்குவரத்து எல்லாமே நிறுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், கொரோனா பரவல் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவிக் கொண்டே இருக்கிறது.
தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.18) ஒரே நாளில் 5890 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 20 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 43,945 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பிய 5667 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 83,937 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 120 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 5886 ஆக உயர்ந்தது. தற்போது 54,122 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தினமும் 200 பேருக்குக் குறையாமலும் தொற்று கண்டறியப்படுகிறது.
சென்னையில் நேற்று 1185 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 17,839 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 224 பேருக்கும், காஞ்சிபுரம் 174, திருவள்ளூர் மாவட்டத்தில் 308 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 21,151 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 20,179 ஆக உயர்ந்துள்ளது.மேலும், கோவை 393 கடலூர் 389, சேலம் 266, தேனி 279, விருதுநகர் 212 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் நோய் பரவுவது முழுமையாகக் கட்டுப்படவில்லை.