இராநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அருண் பிரகாஷ். இவர் தனது நண்பர் யோகஸ்வரனுடன் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள ஏடிஎம் அருகில் நின்று பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த ஒரு கும்பல், நண்பர்கள் இருவரையும் கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளது. இதையடுத்து, இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அருண் பிரகாஷ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். யோகேஸ்வரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இந்தக் கொலைக்கு நீதி கேட்டு தற்போது டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்தக் கொலைக்கு அதிர்ச்சிகரமான காரணங்களும் கூறப்படுகின்றன. கொலையான அருண் பிரகாஷ் சமீபத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது, அவரின் தெருவில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னின்று நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது அந்த பகுதியைச் சேர்ந்த சிலருக்கு பிடிக்கவில்லை என்றும், இதனையடுத்தே அருண் பிரகாஷை கொலை செய்துள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. ``இராநாதபுரம் கள்ளர் தெருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய காரணத்திற்காக அருண்குமார் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. முதல்வர் பழனிசாமி எந்த பாரபட்சமும் இன்றி இந்த பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. கொலை தொடர்பாக ராமநாதபுரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.