Advertisement

ப்ளீஸ் என்னை மன்னிக்கவேண்டும் பலாத்காரம் செய்த பெண்ணிடம் கெஞ்சிய ஆம்புலன்ஸ் டிரைவர்

கொரோனா பாதித்த 22 வயதான இளம் பெண்ணை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது அதன் டிரைவர் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் பத்தனம்திட்டா போலீசார் மிக விரைவாக செயல்பட்டு ஆம்புலன்ஸ் டிரைவர் நவ்ஃபலை கைது செய்துள்ளனர். இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்பட ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ள ஒருவரை ஆம்புலன்ஸ் டிரைவராக நியமித்ததற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி சைமன் கூறியது: கொரோனா பாதித்த இளம்பெண்ணை ஆம்புலன்சில் வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் மிகவும் வேதனையான ஒன்றாகும். பலாத்காரம் செய்த பின்னர் அந்த டிரைவர் இளம்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 'நான் தவறு செய்துவிட்டேன் யாரிடமும் இது குறித்து கூறவேண்டாம், என்னை மன்னிக்க வேண்டும்' என்று கெஞ்சியுள்ளார். இதை அவனுக்கு தெரியாமலேயே அந்த இளம்பெண் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். அது தான் இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாகும். குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.