சொர்க்கத்திற்குப் போக வேண்டுமென்றால் வீட்டில் இருந்து பணமும், நகையும் எடுத்து வந்து என்னிடம் தர வேண்டும் என்று கூறி மாணவர்களை மிரட்டி வந்த அரபி பாடசாலை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் அப்துல் கரீம் (50). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரபிப் பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் அவரிடம் அரபி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இவர் தன்னிடம் படிக்கும் மாணவர்களிடம் 'சொர்க்கத்திற்குப் போக யாருக்கெல்லாம் விருப்பம் உண்டு' என்று கேட்பார். அனைவரும் தங்களுக்கு சொர்க்கத்துக்குப் போக விருப்பம் என்று கூறுவார்கள்.
'அப்படி என்றால் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகையை கொண்டு வந்து என்னிடம் தர வேண்டும்' என்று இவர் கூறியுள்ளார். இதை நம்பி மாணவர்கள் தங்களது வீடுகளிலிருந்து பெற்றோருக்கு தெரியாமல் நகை மற்றும் பணத்தை திருடி கொண்டு வந்து அப்துல் கரீமிடம் கொடுத்தனர். இந்நிலையில் ஒரு மாணவர் பீரோவிலிருந்து நகை திருடுவதை அவரது தாய் பார்த்துள்ளார். இதையடுத்து அவனிடம் விசாரித்த போதுதான் ஆசிரியர் அப்துல் கரீமின் பித்தலாட்டம் குறித்து தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆசிரியர் அப்துல் கரீமை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் இதுவரை பல மாணவர்களிடமிருந்து 5 பவுன் நகை மற்றும் ₹26,000 பணத்தை வாங்கியது தெரியவந்தது. மேலும் ஒரு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆசிரியர் அப்துல் கரீமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.