ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி வீரர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு உற்சாகமாக களம் கண்டு வருகின்றனர். இதேபோல் மற்ற அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மைதானத்தில் ரசிகர்கள் இன்றி மேட்ச் நடைபெற இருப்பதால், அந்த சோகத்தை தீர்க்க வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு ஒவ்வொரு அணியும் தங்கள் ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
இதற்கிடையே, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளார். இண்டிகோ தனி விமானத்தில் ஐபிஎல் பணிகளை கண்காணிப்பதற்காக துபாய் புறப்பட்டுள்ளார் கங்குலி. பயணத்துக்கு முன், விமானத்தின் முன்பு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ``ஐபிஎல் போட்டிக்காக சுமார் ஆறு மாதம் கழித்து துபாய்க்கு என்னுடைய முதல் விமான பயணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் விளையாட உள்ள வீரர்களுக்கு பயோ-செக்யூர் என்று பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீரர்கள் யாரும் அறையை விட்டு வெளியே வரக்கூடாது, பக்கத்து அறையினருடன் பேசக்கூடாது. பக்கத்து அறையில் சகவீரர்கள் இருந்தால், பால்கனியில் நின்று மட்டுமே பேச வேண்டும் என்று விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. போட்டி நடைபெறுவதற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு விட்ட நிலையில் இனி இருக்கும் முக்கியமான பணி வீரர்கள் பயோ-செக்யூர் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு செல்வதே. இந்தப் பணியை மேற்பார்வையிடுவதற்காகவே கங்குலி இன்றே துபாய் விரைந்துள்ளார்.