சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த வீரர் ரஷித் கான் வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஏப்ரல் 9ம் தேதி தொடங்கியது ஐபிஎல் திருவிழா. இந்த ஐபிஎல் விளையாட்டு போட்டிகள் மூலம், உலகின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வெவ்வேறு அணியில் நாடுகளை கடந்து இடம்பிடித்துள்ளனர். இது ஒருவகையில் எல்லா அடையாளங்களையும் கடந்து நட்புடன் பழகும், விளையாடும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
பல்வேறு நாடுகளைச்சேர்ந்த வீரர்களையும் ஒன்றாக இணைத்துள்ளது ஐபிஎல். ஐபிஎல் காலத்தில் கிரிக்கெட் வீரர்களின் சமூகவலைதள பதிவுகள் ரசிகர்களால் அதிக அளவில் கவனம் செலுத்தப்படுகின்றன. கிரிக்கெட் வீரர்களின் பதிவுகள் உடனே வைரலாகி விடுகின்றன. அப்படித்தான் ரஷித்கானின் வீடியோவும் வைரலானது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த வீரர் ரஷித் கான் வெளியிட்டிருக்கும் வீடியோவில் மனிதநேயமும், அன்பும் ஒருங்கே இணைந்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த மாதம் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் அதேவேளையில் இஸ்லாமியர்கள் தங்களது 5 கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பிருந்து வருகின்றனர். இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் ஆப்கன் வீரர் ரஷித் கான் ஒவ்வொரு நாளும் உண்ணா நோன்பிருந்து ரமலான் மாத கடமையை நிறைவேற்றி வருகிறார்.
அவருடன் அதே அணியில் உள்ள முஜிபுர் ரஹ்மான், முகம்மது நபி ஆகியோரும் நோன்பிருக்கும் நிலையில் அவர்களுடன் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர் இருவரும் நோன்பிருந்ததாக ரஷித் கான் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் டேவிட் வார்னர் கூறுகையில், உண்ணா நோன்பிருந்தது நன்றாக இருந்ததாகவும் ஆனால் பசி, தாகம் ஏற்பட்டதாகவும் நாக்கு வறண்டு போனதாகவும் கூறுகிறார்.
வெவ்வேறு மொழி, கலாசாரத்தைக் கொண்டிருந்தாலும் சக வீரருக்காக ரம்ஜான் நோன்பு நோற்ற டேவிட் வார்னர், கேன் வில்லியம்சனின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.