என்னால் முடிந்தது ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்

by Madhavan, Apr 26, 2021, 19:38 PM IST

இந்தியாவுக்கு தன்னால் முடிந்த நிதியை அளித்து உதவியுள்ளார் கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ். அவரது இந்த செயல் இந்தியர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தலைவிரித்து ஆடுகிறது. பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நாடே ஸ்தம்பித்து கிடக்கிறது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை அமலுக்கு கொண்டுவந்துள்ளன. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பல உயிர்கள் பறிபோயுள்ளன. உலக நாடுகள் `இந்தியாவுக்கு நாங்கள் உதவ தயார் என்று கைகொடுக்க முன்வந்துள்ளன.

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஆக்சிஜன் வாங்கி சப்ளை செய்வதற்காக, அவரால் முடிந்த அளவிற்கு 50 ஆயிரம் அமெரிக்கா டாலர் (இந்திய பண மதிப்பில் ரூ. 37,36,590.00) பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், ஐபிஎல் போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களையும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இக்கட்டான நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாட்டு என நினைக்கலாம். ஆனால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலையில், கிரிக்கெட் அவர்களுக்கு சந்தோசத்தை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவுடனான எனது அன்பு, கடந்த சில ஆண்டுகளாக இணக்கம் அடைந்து வருகிறது. இங்கிருக்கும் மக்கள் அன்புடன் பழகக் கூடியவர்கள். தற்போதைய நிலையில் இந்தியாவில் பெரும்பாலானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்து சொல்ல மாளாத துயரத்திற்கு நான் ஆளாகி உள்ளேன்.

மக்கள் தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் நடத்துவது தேவை தானா? அது பொருத்தமானதா? என்ற விவாதம் எல்லாம் நடந்து வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் ஐபிஎல் தொடர் மக்களின் வாட்டத்தை ஒரு நாளில் சில மணி நேரமாவது போக்கும் என நம்புகிறேன். இந்தியாவில் இருக்கும் சூழ்நிலையை மனதில் கொண்டு என்னால் முடிந்த பங்களிப்பை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளேன். இந்த நிதியை இந்திய மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை வாங்கிக் கொள்ளுங்கள்.

என்னுடன் ஐபிஎல் தொடரில் விளையாடும் சக வீரர்கள் மற்றும் இந்தியாவின் மனபான்மையை கண்டறிந்த உலக மக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். என்னால் முடிந்தது 50000 அமெரிக்க டாலர். (இந்திய மதிப்பில் 37,36,590 ரூபாய்). இது ஒரு தொடக்கம் தான். எனது பங்களிப்பு பெரிய திட்டங்களை செயல்படுத்த எந்த அளவிற்கு உதவும் எனத் தெரியவில்லை. இருந்தாலும் சிலரது வாழ்வில் ஒரு சின்ன மாற்றமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading என்னால் முடிந்தது ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம் Originally posted on The Subeditor Tamil

More Ipl league News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை