தங்கக் கடத்தல், போதைப் பொருள் வழக்கு நெருக்கடியில் மலையாள சினிமா

by Nishanth, Sep 9, 2020, 19:37 PM IST

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் மற்றும் பெங்களூரு போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் மலையாள சினிமா துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கடந்த இரு மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தூதரகத்தில் உயர் பொறுப்பில் இருந்த ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்குமார் ஆகியோர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த தங்க கடத்தலில் மலையாள திரையுலகைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தங்க கடத்தலில் 3வது குற்றவாளியான பைசல் பரீத் என்பவர் சில மலையாள சினிமாக்களை தயாரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.


மேலும் பல மலையாள சினிமாக்களுக்கு இவர் முதலீடு செய்ததும் தெரியவந்தது. தங்க கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் தான் இவர் சினிமாவில் முதலீடு செய்துள்ளார் என்பதையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூருவில் போதை பொருள் கடத்தியதாக கன்னட டிவி நடிகை உள்பட 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மலையாள சினிமா துறையை சேர்ந்த பலர் இந்த கும்பலுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.
போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த முஹம்மது அனூப் என்பவர் சில இளம் துணை இயக்குனர்கள் உதவியுடன் மலையாள திரை உலகினருக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வந்துள்ளார். இதையடுத்து இந்த இரு சம்பவம் தொடர்பாக கேரள போலீசாரும், போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகளும் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த இரண்டு வருடத்தில் தயாரிக்கப்பட்ட மலையாள சினிமாக்களுக்கு யார் யார் முதலீடு செய்துள்ளார்கள் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இது தொடர்பான விவரங்களைக் கேட்டு மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்கத்திற்கு போலீசார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மலையாள சினிமா துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


More Cinema News

அதிகம் படித்தவை