நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நவம்பர் மாதம் கட்சி துவங்க போவதாக அதிகாரபூர்வமற்ற அறிவிப்புகள் வெளியான போது, ரஜினியை தன் பக்கம் ஈர்க்க அனைத்து வகையான அரசியல் நகர்வுகளையும் செய்ய ஆரம்பித்து இருக்கிறது பாஜக. அந்த கட்சியின் முக்கிய பிரமுகரான நயினார் நாகேந்திரன் பாஜகவோடு கூட்டணி அமைக்க ரஜினிகாந்த் விருப்பப்பட்டால், பாஜக தயாராக உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்பின்பு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத், பாஜக பிரமுகர் கறுப்பு முருகானந்தம் போன்றோர் தொடர்ந்து ரஜினிக்கு அரசியல் தூது விட்டுக் கொண்டு உள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு அரசியல் முகத்தை துவக்கத்தில் இருந்தே அளித்து வரும் பாஜக, தற்போது ரஜினிக்கு கடும் அன்பு நெருக்கடி கொடுத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ரஜினியை ஆயத்தப்படுத்த முற்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆடிட்டர் குருமூர்த்தியை மட்டும் அல்லாது TTV தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்களை தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ரஜினி ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.
ஆன்மீக அரசியல் என்ற பெயரில் இந்துத்துவா அரசியலை தமிழகத்தில் முன்னெடுக்க ரஜினி முயல்வதாக திமுகவினர் குற்றம் சாட்ட, தனக்கு காவி சாயம் பூச முயல்கிறார்கள் என ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்ததும், கடந்த காலங்களில் நடந்து உள்ளன. இதை எல்லாம் வைத்து பார்க்கையில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா ? அப்படி கட்சி ஆரம்பித்தால், அவர் எந்த கொள்கையை பின்பற்ற போகிறார் என ஆயிரம் கேள்விகள் ரஜினிகாந்தை சுற்றி வருகின்றன.
சிஸ்டம் சரியில்லை என கட்சி ஆரம்பிக்க போவதாக சொன்ன ரஜினிகாந்த், ஒருவேளை பாஜகவோடு சேர்ந்தால், அதிமுக அந்த கூட்டணியில் இடம்பெறுமா ?
சிஸ்டத்தை நடத்தும் அதிமுகவை, சிஸ்டம் சரியில்லை எனக் கூறிய ரஜினி, அந்த தேர்தல் கூட்டணியில் இணைவாரா ?
என்ன செய்ய போகிறார் ரஜினி ?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.