கள்ளக்காதலை தட்டிக் கேட்ட மனைவிக்கு அடி, உதை.. வைரலான வீடியோ.. போலீஸ் ஏடிஜிபி பதவி பறிப்பு..

ADGP Purushottam Sharma beating his wife video went viral.

by எஸ். எம். கணபதி, Sep 28, 2020, 13:49 PM IST

மத்தியப் பிரதேசத்தில் போலீஸ் கூடுதல் டிஜிபி ஒருவர் தனது கள்ளத் தொடர்பை கையும்களவுமாக கண்டுபிடித்த மனைவியை அடித்து உதைத்தார். அந்த காட்சி வீடியோவில் பதிவாகி வைரல் ஆனதால் அவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இங்கு போலீஸ் கூடுதல் டிஜிபியாக புருஷோத்தம் சர்மா பணியாற்றி வந்தார். அவருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் ரகசியத் தொடர்பு இருந்துள்ளது. இதை ஏடிஜிபியின் மனைவி கண்டித்து வந்துள்ளார்.


ஒரு நாள் ஏடிஜிபி புருஷோத்தம் சர்மா தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இது பற்றி ஏடிஜிபியின் மனைவிக்கு தகவல் கிடைத்து அவர் சிலருடன் அந்த கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஏடிஜிபி கள்ளக்காதலியுடன் சிக்கி விட்டார். அங்கேயே ஏடிஜிபி தனது மனைவியை கடுமையாக திட்டி சண்டை போட்டுள்ளார்.
அதன்பிறகு, வீட்டுக்கு திரும்பியதும் மனைவியின் முடியைப் பிடித்து இழுத்து அடித்து உதைத்தார். தனது தனிப்பட்ட விஷயத்தில் தலையிடக் கூடாது என்று மனைவியை மிரட்டினார். இதற்கிடையே, மனைவியை அவர் அடித்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோவை முதல்வர், உள்துறை அமைச்சர் மற்றும் உள்துறை செயலாளருக்கு ஏடிஜிபியின் மகன் அனுப்பியிருக்கிறார். மேலும், ஏடிஜிபியின் மனைவியும், மகனும் புகாரும் கொடுத்தனர்.


இதையடுத்து, ஏடிஜிபியின் பதவியை பறித்து காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சர் நாரோட்டம் மிஸ்ரா கூறுகையில், புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஏடிஜிபி புருஷோத்தம் சர்மா கூறுகையில், எனக்கு திருமணமாகி 32 வருஷம் ஆகி விட்டது. இது என் குடும்பப் பிரச்னை. கடந்த 2008ம் ஆண்டே என் மீது மனைவி புகார் கொடுத்தார். ஆனால், அதற்குப் பிறகும் எனது பணத்தில்தான் வெளிநாடுகள் எல்லாம் சுற்றி வந்தார். இப்போது அவர் வேண்டுமென்றே வீட்டில் சிசிடிவி பொருத்தி இந்தப் பிரச்னையை கிளப்பி விட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
ஏடிஜிபி விவகாரம் பற்றி, காவல்துறையினரிடம் கேட்ட போது, பெரிய குடும்பங்களில் இதெல்லாம் சகஜம்தான்.. என்று சாதாரணமாக முடித்து கொண்டனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Crime News

அதிகம் படித்தவை