பெண்களின் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, பணம் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த சட்டக்கல்லூரி மாணவனை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், உப்படா கோட்டப்பள்ளியைச் சேர்ந்தவர் செம்மிரெட்டி ஸ்ரீனிவாசராவ். இவர் காக்கிநாடாவில் உள்ள ராஜீவ் காந்தி சட்டக்கல்லூரியில் பயின்று வருகிறார். இவர், சமூக வலைத்தளங்கள் மூலம், திருமணத்துக்கு பெண் தேடுவதாக கூறி விளம்பரம் செய்துள்ளார்.
மேலும், தன்னை தொடர்பு கொள்ளும் பெண்களுடன் உறவை வளர்த்து வந்துள்ளார். அது மட்டுமல்லாது அந்த பெண்களிடம் இருந்து புகைப்படங்களையும் செம்மிரெட்டி பெற்றுக் கொள்வார். அவ்வாறு பெற்றுக்கொண்ட புகைப்படங்களை மார்பிங் செய்துள்ளார்.
தவிர, மார்பிங் செய்யப்பட்ட அந்த படங்களை குறிப்பிட்ட பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ளார். அந்த பெண்களிடம் செம்மிரெட்டி பணம் மற்றும் நகைகள் பெற்று வந்துள்ளார். அவ்வாறு பணம் தர மறுக்கும்பட்சத்தில், மார்பிங் செய்யப்பட்ட அந்த ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டுவார். இவ்வாறு பல பெண்களிடம் பணம் மோசடி செய்துள்ளார்.
இந்நிலையில் செம்மிரெட்டி மீது, காக்கிநாடா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. செம்மிரெட்டியால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த புகாரை அளித்துள்ள்னர். இதனைத் தொடர்ந்து செம்மிரெட்டியை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.