வரும் தேர்தலில் ரஜினி, கமலுக்கு பூஜ்யம் வாக்குகள் தான் கிடைக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவி ஏற்றார். பிறகு, சசிகலாவின் வற்புறுத்தலால் ராஜினாமா செய்தார். இதன் பிறகு, எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு முதல்வராக பதவி ஏற்றார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகே, அரசியல் களத்தில் சலசலப்பு இருந்துக் கொண்டே தான் வருகிறது. தினகரனின் திடீர் வரவை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனும், நடிகர் ரஜினியும் அடுத்தடுத்து அரசியல் களத்தில் குதித்தனர். இது, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிர்ச்சி இருந்தாலும், அவர்களால் எங்களால் எந்த பாதிப்பும் இல்லை என்று தான் கூறி வருகிறார்கள். தொடர்ந்து, இருவர் மீதும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று ஓராண்டு ஆன நிலையில், நேற்று ஓராண்டு சாதனை விழா நடைபெற்றது. அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம் ரஜினி & கமலை மறைமுகமாக தாக்கி விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது: அரசியலுக்கு புதிது புதிதாக ஒரு சிலர் வந்து கொண்டிருக்கிறார்கள். மக்களை பற்றி சிந்திக்காதவர்கள் சிஸ்டத்தை பற்றி சிந்திக்கிறார்கள். சிலர் கருத்து கந்தசாமியாக இருக்கிறார்கள். அரசியல் பற்றி தெரியாதவர்களுக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும் என்றார்.