உத்திரப்பிரதேச மாநிலத்தில் பலாத்கார முயற்சியை தடுத்த மாணவி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பலால் வீடுபுகுந்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் நமது நாட்டுக்கு பெரும் அவமான சின்னமாக மாறிவருகிறது. இந்தியாவிலேயே இந்த மாநிலத்தில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. நாளுக்குநாள் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பலாத்காரம் செய்து கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் இந்த மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற இடத்தில் 19 வயதான ஒரு மாணவி 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதன்பிறகும் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை என்பதற்கு உதாரணமாக மேலும் மேலும் கொடூர சம்பவங்கள் இந்த மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்த மாநிலத்தில் உள்ள பிரோசாபாத் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி 11ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரை அப்பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் அடிக்கடி தொந்தரவு செய்து வந்தனர். மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் பல முறை மிரட்டி அந்த 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். ஆனால் அதற்கு அந்த மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இது அந்த 3 பேருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவியை கொல்வதற்கு திட்டமிட்டனர். நேற்று இரவு வழக்கம்போல அந்த மாணவி வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். வழக்கமாக வீட்டின் கேட்டை பூட்டுவது உண்டு. ஆனால் நேற்று கேட்டை பூட்ட மறந்து விட்டதாக கூறப்படுகிறது. இரவில் வீட்டுக்குள் புகுந்த அந்த 3 பேரும் கதவை உடைத்து திறந்து, தூங்கிக் கொண்டிருந்த மாணவியை சரமாரியாக சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பிரோசாபாத் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநிலத்தில் அடுத்தடுத்து நடக்கும் இதுபோன்ற கொடூர சம்பவங்களுக்கு போலீசாரின் அலட்சியம் தான் காரணம் என கூறப்படுகிறது. இதையடுத்து இதுபோன்ற புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில போலீசாருக்கு உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் இதுவரை அதில் எந்த பலனும் ஏற்படவில்லை என்பது தான் வேதனையான விஷயமாகும். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.