சென்னையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுக் குழு தீர்மானத்தை வாசித்து, திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, செப்டம்பரில் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 40 நாட்களுக்கு மேலாகியும் அந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. மேலும் 3, 4 வார அவகாசம் தேவை என்று அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(அக்.24) காலை கவர்னர் மாளிகை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், திமுக மூத்த நிர்வாகிகள் நேரு, டி.ஆர்.பாலு, கனிமொழி, மா.சுப்பிரமணியன் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஏராளமான குழப்பங்கள், வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது.
கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வு கூடாது என்பதே நமது நிலைப்பாடு. கருணாநிதி ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு, தமிழகத்திற்குள் நுழையவில்லை. ஜெயலலிதாவிடம் நமக்கு ஏராளமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, அவர் உயிரோடு இருந்த வரைக்கும் தமிழகத்திற்கு நீட் தேர்வு வரவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம். ஆனால், மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி ஒரு அடிமையாக இருப்பதால், இப்போது இந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு வந்து விட்டது. எடப்பாடி பழனிசாமி எப்படி காலில் விழுந்து ஆட்சிக்கு வந்தாரோ, இப்போது ஆட்சியைக் காப்பாற்ற அஞ்சி, நடுங்கி, கூனிக்குறுகி அடிமையாக இருந்து கொண்டிருக்கிறார். கடந்த 1.2.2017ம் தேதியன்று நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் 2 மசோதாக்களை சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தோம். அதை 7 மாதங்கள் கழித்து மத்திய அரசு திருப்பி அனுப்பியிருக்கிறது.
ஆனால், அந்த விஷயத்தை எடப்பாடி அரசு, சட்டசபையில் தெரிவிக்காமல், மக்களுக்கும் தெரிவிக்காமல் மறைத்து விட்டது. இது தொடர்பான பிரச்னை நீதிமன்றத்திற்கு சென்ற போதுதான், அந்த விஷயம் 21 மாதங்கள் கழித்து மக்களுக்கு தெரிய வந்தது. இதை நான் சட்டசபையிலேயே பேசினேன். அதை அமைச்சரும் ஒப்புக் கொண்டார். ஆனால், நீட் தேர்வை வரவிடாமல் கடைசி வரை போராடுவோம் என்று உறுதியும் கொடுத்தார். அதே போல், என் கையில் இருப்பது அதிமுக பொதுக் குழு தீர்மான நகல். இதில் உள்ள தீர்மானத்தையும் வாசிக்கிறேன். நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே அதிமுக எதிர்க்கிறது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களை மருத்துவக் கல்வியில் சேர விடாமல் தடுப்பதாலும், கல்வி வணிகமயமாக்கப்படுவதாலும் நீட் தேர்வை வர விடாமல் தடுக்க முயற்சிப்போம் என்று கூறியிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுக தேர்தல் அறிக்கையிலும் சொன்னார்கள்.
ஆனால், என்ன நடந்தது. இப்போது நீட் தேர்வை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு இப்போது அனுமதியை பெறாமல் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கவர்னர் அனுமதி தராவிட்டால் நாங்கள் உங்களுடன் இணைந்து போராடத் தயார் என்று சொன்னேனே.. அதையாவது ஏற்று போராட முன்வந்தீர்களா? அதை விட்டுவிட்டு, ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி அறிக்கை விடுகிறார். எதிர்க்கட்சி என்றால் அரசியல் செய்யாமல், அவியலா செய்வார்கள்? உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி கிடைத்தால், 300 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துக் கல்லூரியில் சீட் கிடைக்கும். இல்லாவிட்டால் வெறும் 8 சீட் தான் கிடைக்கும். இந்த அநீதி நடப்பதை அதிமுக பார்த்து கொண்டிருக்கலாம். திமுக வேடிக்கை பார்க்காது. அதை தடுக்க என்னென்ன வழிவகை உள்ளதோ, அத்தனையும் செய்வோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.