கிரைம் சீரியலை 100 தடவைக்கு மேல் பார்த்து எந்த ஆதாரத்தையும் விட்டுவைக்காமல் தந்தையைக் கழுத்தை நெறித்துக் கொன்று மகன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 மாதங்களுக்குப் பின்னர் பெரும் சிரமத்திற்குப் பிறகு தான் அந்த 17 வயது பள்ளி மாணவனை போலீசாரால் கைது செய்ய முடிந்தது.
உத்திர பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர் மனோஜ் மிஸ்ரா (42). இவரது மனைவி சங்கீதா மிஸ்ரா (39).
இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். மனோஜ் மிஸ்ரா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் பெரும் கோபக்காரர். கோபம் வந்தால் மனைவியாக இருந்தாலும் சரி, குழந்தைகளாக இருந்தாலும் சரி அடித்து துவம்சம் செய்து விடுவார். நாளுக்கு நாள் மனோஜ் மிஸ்ராவின் கொடுமை தாங்க முடியாததால் தாய் சங்கீதாவும், மகனும் சேர்ந்து அவரை கொல்ல திட்டம் தீட்டினர்.
ஆனால் எப்படிக் கொல்வது என்று தான் தெரியவில்லை. இதற்காக இன்டர்நெட் உதவியை அந்த சிறுவன் நாடினான். ஒரு பிரபல கிரைம் திரில்லர் சீரியலை பார்த்தபோது அதில் எப்படி போலீசிடம் சிக்காத முறையில் ஆதாரமில்லாமல் கொலை செய்யலாம் எனத் தெரியவந்தது. அந்த சீரியலை 100 தடவைக்கு மேல் அந்த சிறுவன் பார்த்து மனதில் பதிய வைத்துக் கொண்டான். இந்த விவரத்தைத் தனது தாயிடம் அந்த சிறுவன் கூறினான். சங்கீதாவும் தன்னுடைய கணவனைக் கொல்வதற்கு ஓகே சொன்னார். இதையடுத்து இருவரும் கொலை செய்வதற்கு உரிய நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்தது.
கடந்த மே 2ம் தேதி இரவில் வழக்கம் போல வீட்டுக்கு வந்த மனோஜ் மிஸ்ரா குழந்தைகள் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இந்த சமயத்தில் அந்த சிறுவன் தயாராக வைத்திருந்த இரும்பு கம்பியால் தந்தையின் தலையில் பலமாகத் தாக்கினான். இதில் மனோஜ் மிஸ்ரா மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக ஒரு துணியால் தந்தையின் கழுத்தை நெறித்தான். இதில் சிறிது நேரத்திலேயே மனோஜ் மிஸ்ரா உயிரிழந்தார். தந்தையைக் கொலை செய்யும்போது உடலில் எந்த இடத்திலும் தன்னுடைய கைரேகை பதியாத அளவுக்கு அவன் கவனமாக இருந்தான்.
இதன் பின்னர் தாயின் உதவியுடன் தந்தையின் உடலை ஸ்கூட்டரில் வைத்து அங்கிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குக் கொண்டு சென்று பெட்ரோல் மற்றும் டாய்லெட் கிளீனர் உதவியுடன் எரித்துள்ளான்.அதைத் தற்கொலை எனக் கருத வேண்டும் என்பதற்காகத் தந்தையின் கண்ணாடி, செருப்பு மற்றும் ருத்ராட்ச மாலையை அங்கேயே வீசிவிட்டு வந்துள்ளான். மறுநாள் ஒருவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக மதுரா போலீசுக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
ஆனால் இறந்தவர் குறித்து போலீசுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. மனோஜ் மிஸ்ராவின் குடும்பத்தினரும் போலீசில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. மனோஜ் மிஸ்ரா அடிக்கடி அங்குள்ள இஸ்கான் கோவிலுக்குச் செல்வது வழக்கம். மூன்று வாரங்களுக்கும் மேலாக அவர் கோவிலுக்குச் செல்லாததால் சந்தேகமடைந்த கோவில் ஊழியர்கள் மனோஜ் மிஸ்ராவின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். அப்போது அவரை காணவில்லை என்று மனைவி சங்கீதா கூறியுள்ளார். போலீசில் புகார் செய்யுமாறு அவர்கள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து சங்கீதா கணவன் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் எரிக்கப்பட்டுக் கிடந்த உடல் மனோஜ் மிஸ்ராவுடையது எனக் கண்டுபிடித்தனர். முதற்கட்ட விசாரணையிலேயே மனோஜ் மிஸ்ரா கொல்லப்பட்டதை போலீசார் ஏற்கனவே கண்டுபிடித்திருந்தனர். சந்தேகத்தின் பேரில் பலமுறை சங்கீதாவிடமும், அவரது மகனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களிடமிருந்து எந்த தகவலும் போலீசுக்கு கிடைக்கவில்லை. விசாரணைக்கு அழைக்கும் போது, எந்த காரணத்துக்காக எங்களை விசாரணைக்கு அழைக்கிறீர்கள் என்று கேட்டு இருவரும் போலீசையே மிரட்டியும் வந்துள்ளனர். பலமுறை விசாரணைக்கு ஆஜராகாமலும் இருந்து வந்தனர்.இந்த வழக்கு போலீசுக்கு பெரும் சவாலாக இருந்தது. எப்படியும் குற்றவாளியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற முயற்சியில் போலீசார் தீவிரமாகத் துப்பு துலக்கினர். தொடக்கத்திலிருந்தே மனோஜ் மிஸ்ராவின் மனைவி மற்றும் மகன் மீது சந்தேகம் இருந்தாலும் முக்கிய ஆதாரங்கள் எதுவும் போலீசுக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த சிறுவனின் செல்போனை போலீசார் கைப்பற்றிப் பரிசோதித்தனர். அதில் கிரைம் திரில்லர் சீரியலை 100க்கும் மேற்பட்ட முறை அவன் பார்த்தது தெரியவந்தது. அதைப் பார்த்ததும் அவன் தான் கொலையாளி என்பதை போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து அந்த சிறுவனிடம் போலீசார் முறைப்படி விசாரித்த போது கடைசியில் அந்த சிறுவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். இதையடுத்து அந்த சிறுவனையும், கொலைக்கு உடந்தையாக இருந்த தாய் சங்கீதாவையும் போலீசார் கைது செய்தனர். 5 மாதங்களுக்குப் பின்னர் தான் குட்டிக் குற்றவாளியை போலீசாரால் கண்டுபிடிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.