சென்னை பூந்தமல்லி அருகே நள்ளிரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிபவர் அன்பழகன். இவர், நேற்று இரவு குமணன்சாவடி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஹட்கோ நகர் சந்திப்பு அருகே சந்தேகத்திற்கு இடமாக இருந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தனர். இதில், மூன்று பேர் இருந்தனர்.
தொடர்ந்து, மூன்று பேரையும் போலீசார் விசாரித்தார். மேலும், இவர்கள் வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்று கண்டறிய காவலர் அன்பழகன் அவர்களை போட்டோ எடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரில் ஒருவன் அன்பழகனை தாக்கினான். பின்னர், மற்றொருவன் அவன் வைத்திருந்த அரிவாளை எடுத்து அன்பழகனை வெட்ட முயன்றுள்ளனர். அன்பழகன் தடுக்க முயன்றபோது, அவரது கை மற்றும் தொடைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அன்பழகனின் செல்போனை பறித்துக் கொண்டு மூன்று பேரும் தப்பி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து அன்பழகனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். முதல் உதவி அளிக்கப்பட்டதை அடுத்து, அன்பழகனை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், அன்பழகனை தாக்கிவிட்டு தப்பிய மூன்று பேரின் அடையாளம் தெரிந்தது. தொடர்ந்து, தலைமறைவாக இருந்த திருவேற்காடு பகுதியை சேர்ந்த சதீஸ்குமார், ரஞ்சித், பன்னீர்செல்வம் ஆகிய மூன்று ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூன்று பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.