கர்நாடக மாநிலம் தார்வாட் தொகுதியைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் யோகேஷ் கவுடா 2016ல் கொலை செய்யப்பட்டார். இதில் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னி. இந்த கொலை வழக்கு தொடர்பாக வினய் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் கைதை முன்கூட்டியே அறிந்து அதனை தடுக்கும் வேலைகளிலும் வினய் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பாஜக உறுப்பினரை கொலை செய்த குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க பாஜகவிலேயே வினய் சேர முயன்றது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தன் தொகுதியில், தனக்கு நெருக்கமாக உள்ள பாஜக தலைவர்கள் மூலம் இதற்காக காய் நகர்த்தி வந்துள்ளார். அதன்படி, அக்டோபரில், வினய் குல்கர்னி மற்றும் சிபி யோகீஷ்வர் ஆகியோர் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய இடங்களுக்கு சென்று பல பாஜக மேலிட தலைவர்களை சந்தித்துள்ளனர்.
மேலிட தலைவர்களிடம் சிபிஐ இந்த வழக்கில் இருந்து தனது பெயரை நீக்கிவிட்டால் கட்சியில் இணைகிறேன் என்று கூறி அதிரவைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் செவி மடுக்கவே, தற்போது சிபிஐ கஸ்டடியில் இருக்கிறார். திரை மறைவில் நடந்த இந்த சம்பவங்களை கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா பொதுவெளியில் போட்டு உடைத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.