செல்போனில் ஆப் டவுன்லோடு செய்யுமாறு கூறி 9 லட்சம் மோசடி

by Nishanth, Nov 9, 2020, 13:54 PM IST

கிரெடிட் கார்டு தொகையை அதிகரிப்பதற்காக ஒரு 'ஆப்' டவுன்லோடு செய்யுமாறு கூறி வங்கிக் கணக்கில் இருந்து 9 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாக்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வங்கிகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்கிலிருந்து நூதன முறையில் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து அவர்களுடன் தொடர்புகொண்டு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி இந்த மோசடிகள் நடத்தப்பட்டு வருகின்றன. எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் இந்த மோசடியை தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக நமது செல்போன் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் நம்முடைய கணக்கிலிருந்து பணத்தை எடுத்தாலோ அல்லது பணத்தை போட்டாலோ எஸ்எம்எஸ் மூலம் தகவல் வரும்.

ஆனால் இதுபோல எஸ்எம்எஸ் தகவல் வராமல் கூட மோசடி நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டாலும் கூட உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு தெரியவராது. இந்நிலையில் நாக்பூரில் ஒரு வங்கி வாடிக்கையாளருக்கு போன் செய்து, கிரெடிட் கார்டு தொகையை அதிகரிப்பதற்காக ஒரு 'ஆப்' பை டவுன்லோடு செய்ய வைத்து 9 லட்சம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் அசோக் மன்வதே. இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டிலிருந்த அசோக்கின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது அசோக் குளியல் அறையில் இருந்தார். இதனால் அவரது 15 வயது மகன் போனை எடுத்துள்ளான். மறுமுனையில் பேசிய ஒரு நபர், அசோக்கின் கிரெடிட் கார்ட் தொகையை அதிகரிப்பதற்காக ஒரு 'ஆப்'பை டவுன்லோடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த சிறுவன் அந்த நபர் கூறிய 'ஆப்'பை செல்போனில் டவுன்லோடு செய்தான். அந்த 'ஆப்' டவுன்லோடு ஆன ஒரு சில வினாடிகளிலேயே அசோக்கின் வங்கிக் கணக்கில் இருந்து 8.95 லட்சம் எடுக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அசோக் மோசடி குறித்து நாக்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading செல்போனில் ஆப் டவுன்லோடு செய்யுமாறு கூறி 9 லட்சம் மோசடி Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை