ஒரே மாதத்தில் 1000 பிரதி கடந்த பூலித்தேவன் ராணுவ வரலாறு.. கபிலன் வைரமுத்து எழுதியது

by Chandru, Nov 9, 2020, 13:57 PM IST

திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என் பன்முகம் கொண்டவர் கபிலன் வைரமுத்து இவர் 1750களில் ஆண்ட பூலித்தேவன் வரலாற்று பின்னணியில் அம்பறாத்தூணி என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தினார். இதுபற்றி அவர் கூறியதாவது:1750களில் மாமன்னர் பூலித் தேவனின் ராணுவ முகாமில் நிகழ்வது போன்ற ஒரு சிறுகதை. அதில் சங்கரன் கோயில் சன்னதியில் மன்னர் தெய்வத்தை வழிபடும் ஒரு காட்சி. மன்னர் பாடுவதாக ஒரு பாடல் வேண்டும். அதை கற்பனையாக எழுதுவதை விட மாவீரர் பூலித்தேவனே பாடியதாக வரலாற்றில் ஏதேனும் பாடல் உண்டா என்று ஆய்வாளர்களைத் தொடர்புகொண்டு பல்வேறு தரவுகளில் தேடினேன். அப்படி ஒரு பாடல் கிடைத்தது. அவரே பாடிய அந்தப் பாடலைத்தான் அந்தச் சிறுகதையில் பயன்படுத்தியிருக்கிறேன். வேற்றுமொழி கார்டூன் தொடர்களுக்கு தமிழில் குரல் கொடுப்பவர்களுக்கான குரல் தேர்வுக்கு என்னென்ன தேர்வுமுறைகள் கையாளப்படுகின்றன என தேடியபோது மும்பையில் நடந்த ஒரு வினோதமான தேர்வுமுறை என்னை ஈர்த்தது.

அது ஒரு சிறுகதையாகியிருக்கிறது. 1876ஆம் ஆண்டு சென்னை மாகாண பெரும் பஞ்சத்தின் போது நிகழும் என் சிறுகதையில் அந்த பஞ்சத்தை அன்று புகைப்படம் எடுத்த பிரிட்டிஷ் ராணுவ புகைப் படக்கலைஞர் வாலஸ் ஹூப்பர் என்பவரை மனதில் கொண்டு வில்லியம் ஹூப்பர் என்ற கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறேன். ஆழ்கடல் சுரங்கம் குறித்த ஒரு சிறுகதைக்காகக் கடலில் என்னென்ன எந்திரங்கள் இயங்குகின்றன என்பதை அறியவும், சர்வதேச கடல் படுகை ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளவும் மேற்கொண்ட ஆய்வு எனக்கு புதிய உலகங்களை அறிமுகம் செய்தது. 1806-ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய் புரட்சியின் பின்னணியில் நிகழும் ஒரு சிறுகதைக்கு கதையின் களத்தை நேரில் கண்டுணர வேலூரில் மூன்று நாட்கள் தங்கியிருந்ததும் கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்த திப்புசுல்தானின் புதல்வியின் பெயரைக் கண்டறிந்து அதை உறுதிப்படுத்தியதும் நுட்பமானப் பயணமாக இருந்தது. இன்னும் பல தேடல்கள். இந்த ஆய்வு களுக்கு எனக்கு உதவிய பேராசிரியர்களுக்கும் அறிஞர்களுக்கும் என் நன்றிகள்.

வானத்தையே அள்ளிக் கொள்ள நினைத்து மழையில் நனைய ஓடும் குழந்தை ஒரு சில துளிகளை மட்டும் உள்ளங்கையில் ஏந்தி வருவது போல் ஒரு சில தகவல்களை மட்டுமே கதைகளுக்குள் பயன்படுத்தியிருக்கிறேன். அம்பறாத்தூணியில் நான் உருவாக்கியிருக்கும் சில மனிதர்களுக்கு ஒரே கதைக்குள் அடங்கியிருக்கும் ஒழுக்கம் கிடையாது. ஒரு கதையில் இருப்பவர்கள் இன்னொரு கதையிலும் இருப்பார்கள். இவ்வாறு கபிலன் கூறினார். கபிலன்வைரமுத்து எழுதிய அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியான முதல் மாதத்திலேயே ஆயிரம் பிரதிகள் விற்பனையைக் கடந்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் மூன்றாம் நாள் வெளியான இந்த நூல் பல்வேறு தரப்பினரின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இது குறித்து பதிப்பாளர் வேடியப்பன் கூறுகையில் “பதிப்பாளர் என்ற முறையில் இரண்டு வகையில் எனக்கு இது வியப்பளிக்கிறது.

ஒன்று இன்றைய தமிழ் வாசிப்பு சூழலில் ஒரு புனைவிலக்கியம் ஆயிரம் பிரதிகள் விற்பனை என்பது அதுவும் ஒரு மாதகாலத்தில் என்பது. மற்றொன்று கொரோனா பேரிடர் காலத்தில் ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட வகையில் பொருளாதார நெருக்கடிகள் உள்ள சூழலில் இந்த விற்பனை நம்பிக்கை அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார். கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் இலக்கிய விமர்சகருமான அ.ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன் என பல துறையைச் சேர்ந்தவர் கள் தங்களுடைய வலைப்பக்கங்களில் அம்பறாத்தூணி குறித்த தங்கள் விமர்சனங்களையும் பாராட்டையும் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஒரே மாதத்தில் 1000 பிரதி கடந்த பூலித்தேவன் ராணுவ வரலாறு.. கபிலன் வைரமுத்து எழுதியது Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை