அமெரிக்க மக்கள் தங்கள் தவறை திருத்திக் கொண்டார்கள் என்று டிரம்ப்பின் தோல்வியை சிவசேனா விமர்சித்துள்ளது. தங்களை விட்டால் யாரும் இல்லை என்ற மாயையில் இருப்பவர்களை மக்கள் தூக்கியெறியத் தொடங்கி விட்டனர் என்று பாஜகவையும் தாக்கியுள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒரு மாதம் தாங்குமா என்று சந்தேகிக்கப்பட்ட ஆட்சி, ஓராண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தீவிர இந்துத்துவா கொள்கைகளை கொண்ட சிவசேனா, தொடர்ந்து பாஜகவை கடுமையாக தாக்கி வருகிறது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் இன்று வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை தோற்கடித்ததன் மூலம், அந்நாட்டு மக்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறை திருத்திக் கொண்டார்கள்.
அதைப் பார்த்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். டிரம்ப் பதவிக்காலத்தில் மக்களுக்கு உருப்படியாக எதுவுமே செய்யவில்லை. அங்கும் கோவிட்19ஐ விட பெரிய நோயாக வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது. அதற்கெல்லாம் தீர்வு காணாத டிரம்ப், எப்போதும் அரசியல் வெறுப்பு மற்றும் தேவையற்ற கூத்துக்களையே அரங்கேற்றி வந்தார்.பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக கூட்டணி இந்த முறை ஆட்சியை இழக்கிறது. நாட்டை ஆள்வதற்கும், மாநிலத்தை ஆள்வதற்கும் நம்மை விட்டால் யாருமே இல்லை என்று மாயைகளில் இருந்தவர்களை மக்கள் தூக்கியெறியத் தொடங்கி விட்டார்கள். டிரம்ப்புக்கு இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்ட விஷயத்தை மறந்து விட முடியாது. தவறான மனிதருக்கு இப்படியொரு வரவேற்பு அளிப்பது, நமது கலாசாரத்திலேயே இல்லாத ஒன்று. இதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவ்வாறு சாம்னாவில் கூறப்பட்டிருக்கிறது.