அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணம், செசபீக்கைச் சேர்ந்த டாக்டர் ஜாவித் பெர்வைஸ். இவா் ஒரு மகளிா் மருத்துவ நிபுணா். இந்த டாக்டா் ஜாவித் பெர்வைஸ் தனது நோயாளிகளுக்கு தேவையற்ற அறுவை சிகிச்சைகள் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ காலத்துக்கு முன்கூட்டியே அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேலும் 30 நாட்கள் காத்திருப்பு காலங்களை மீறி நிரந்தர கருத்தடைகளை செய்துள்ளாா் எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்க அறுவை சிகிச்சை அவசியம் எனக்கூறி நோயாளிகளிடமிருந்து பணம் பெற்றுள்ளாா் எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து நடந்த விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக பெர்வைஸ் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு 41.26% பேருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேலும் சராசரியாக ஒரு மருத்துவா் 7.63% நோயாளிகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சைகள் செய்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
இதேபோல், பெர்வைஸ் தனியார் மற்றும் அரசு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து மில்லியன் கணக்கான டாலர்களை அறுவை சிகிச்சைக்கு பெற்றுள்ளார் என நீதி மன்ற பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்த 52 வழக்குகளின்படி டாக்டா் பெர்வைஸ்க்கு 465 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் ஆணை பிறபித்துள்ளது.