புதையல் எடுப்பதற்காக சொந்த குழந்தைகளை நரபலி கொடுக்க முயற்சி.. அண்ணன், தம்பி கைது

Nov 16, 2020, 19:12 PM IST

மாமரத்தின் அடியில் மறைந்திருக்கும் புதையலை எடுப்பதற்காக சொந்த குழந்தைகளை நரபலி கொடுக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். போலீசார் தக்க சமயத்தில் தலையிட்டதால் 6 குழந்தைகளின் உயிர்ப் பலி தடுத்து நிறுத்தப்பட்டது. அசாம் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் உள்ளது திமவ்முக் கிராமம். இது அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து 370 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜாமியுர் உசேன், சரீபுல் உசேன். இவர்கள் இருவரும் அண்ணன், தம்பிகள் ஆவர். இவர்கள் இருவருக்கும் தலா 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது குழந்தைகளை புதையலுக்காக நரபலி கொடுக்க திட்டமிட்டிருப்பதாக உள்ளூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அது உண்மை என தெரிய வந்தது. இதை தொடர்ந்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இவர்கள் இருவரும் அடிக்கடி அப்பகுதியை சேர்ந்த ஒரு போலி மந்திரவாதியை சந்தித்து வந்துள்ளனர். சமீபத்தில் அந்த மந்திரவாதியை இவர்கள் பார்க்க சென்றபோது, இருவரது வீட்டுக்கு அருகே உள்ள மாமரத்தின் அடியில் புதையல் இருப்பதாகவும், அது கிடைக்க வேண்டுமென்றால் இரண்டு பேரும் தங்களது மூன்று குழந்தைகளையும் நரபலி கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். போலி மந்திரவாதி கூறியதை ஜாமியுர் உசேனும், சரீபுல் உசேனும் நம்பியுள்ளனர். இதையடுத்து இருவரும் தங்களது குழந்தைகளை நரபலி கொடுக்க தீர்மானித்தனர். இதற்கான நடவடிக்கைகளிலும் அவர்கள் இறங்கினர்.

இதையடுத்து இவர்கள் இருவரும் தங்களது குழந்தைகளை கடந்த சில தினங்களாக வீட்டுக்கு வெளியே செல்ல அனுமதிக்காமல் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருந்தனர். இதில் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை என்று இருவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தான் மந்திரவாதியை பார்க்க சென்றதாக அவர்கள் கூறுகின்றனர். மந்திரவாதியை சந்தித்து விட்டு வந்த பின்னர் கிராமத்தினர் தங்களை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதாகவும், அதனால் தான் பொய்யான புகார் கொடுத்ததாகவும் அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர். விசாரணைக்குப் பின் போலீசார் ஜாமியுர் உசேனையும், சரீபுல் உசேனையும் கைது செய்தனர்.



இதில் கூடுதல் உண்மையை கண்டுபிடிப்பதற்காக போலி மந்திரவாதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மந்திரவாதியை பிடிக்க முடிந்தால் இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் தெரியும் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக யாரும் புகார் செய்யாவிட்டாலும் போலீசார் சுயமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இருவரது 6 குழந்தைகளையும் போலீசார் மீட்டு அங்குள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அசாம் மாநிலத்தில் இதற்கு முன்பும் நரபலியும், நரபலி கொடுக்க முயற்சித்த சம்பவமும் நடந்துள்ளன. கடந்த வருடம் இங்குள்ள உடால்கிரி மாவட்டத்தில் ஒரு குழந்தையை நரபலி கொடுக்க முயற்சித்த போது கடைசி நிமிடத்தில் போலீசார் அந்தக் குழந்தையை காப்பாற்றினர். கடந்த 2013ம் ஆண்டு 13 வயதான சொந்த மகனை பெற்றோர் நரபலி கொடுத்த சம்பவமும் நடந்தது.

You'r reading புதையல் எடுப்பதற்காக சொந்த குழந்தைகளை நரபலி கொடுக்க முயற்சி.. அண்ணன், தம்பி கைது Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை