கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஆலப்புழாவை சேர்ந்தவர் சுமையா இவரும் வட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சஜிர் என்பவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளன.
திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவன்,மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவருமே பிரிந்து வாழ்ந்து வந்தனர். அவர்களது 2 குழந்தைகளும் சஜிருடன் வசித்து வருகின்றனர். மேலும் சஜிரும், சுமையாவும் இனி சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்ததை அடுத்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.இந்த நிலையில் ஒரு பெண்கள் விடுதியில் சுமையா வேலைக்கு சமீபத்தில் சேர்ந்தார்.
மேலும் அந்த விடுதியிலேயே அவர் தங்கியிருந்தார். இதற்கிடையில் அந்த விடுதிக்கு சென்ற சஜிர் விவாகரத்து வழக்கு தொடர்பாக பேச வேண்டுமென்று கூறி சுமையாவை அழைத்துள்ளார். அந்த விடுதி முன்பு சாலையோரத்தில் இருவருமே பேசிக் கொண்டிருந்தபோது திடீரென சண்டை ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த சஜிர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுமையாவை சரமாரியாக வெட்டினார்.
அங்கு இருந்த பொதுமக்கள் சஜிரை மடக்கிப்பிடித்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுமையாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருந்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இத்தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சஜிரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.