காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை வரும் 14ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நீர்வளத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
காவரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் வரும் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால், அம்மாநிலத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். இதனால், வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 14ம் தேதி வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் திட்டவட்டமாக உத்தரவிட்டனர்.
ஆனால், 12ம் தேதி தேர்தல் இருப்பதால், உடனே 14ம் தேதி தாக்கல் செய்ய வாய்ப்பில்லை. இதனால், மேற்கொண்டு கூடுதல் அவகாசம் வழங்க கேட்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் பேசப்பட்டது.
இந்நிலையில், 14ம் தேதி வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தற்போது கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கூறுகையில், “உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுபோல், காவிரி வரைவு திட்ட அறிக்கையை வரும் 14ம் தேதி அன்று நடைபெறும் விசாரணையின்போது தாக்கல் செய்யப்படும். மேற்கொண்டு கூடுதல் அவகாசம் கேட்கமாட்டோம் ” என்றார்.