தனது 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தான் கடந்து வந்த பாதைகள் குறித்து பகிர்ந்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
’காலா’ திரைப்படத்துக்காக தற்போது சூப்பர்ஸ்டார் காத்திருக்கிறார். இந்நிலையில், தனது நாற்பது ஆண்டுகால திரைவாழ்க்கை குறித்து ‘காலா’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி கூறுகையில், “இந்த 40 ஆண்டு சினிமா பயணத்தில் விமர்சனங்களால் மட்டுமே என்னைக் காலி செய்ய நினைத்தவர்கள் அதிகம்.
ஒவ்வொரு முறையும் சினிமா விமர்சனம் எழுதியே என்னை வீழ்த்தியவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால், ஒவ்வொரு முறையும் எழுந்து வந்தேன். 2014-ம் ஆண்டு ‘லிங்கா’ திரைப்படம் வெளியான போது நான் வீழ்த்தப்பட்டேன்.
நதி நீர் இணைப்பு குறித்து அப்படம் பேசியதால் மட்டுமே அப்படத்தை நான் ஒப்புக்கொண்டு நடித்தேன். அதைத்தொடர்ந்து கோச்சடையான் படமும் வணிக ரீதியான வெற்றியைத் தரவில்லை. ஆனால், மீண்டு கபாலி மூலம் எனது வெற்றியை தக்கவைத்துக்கொண்டேன்.
மும்பை மாநகரத்தில் உள்ள சேரி பகுதிகள் குறித்து நான் தான் ரஞ்சித்திடம் சொல்லி கதை தயாரிக்க சொன்னேன். அங்குள்ள தமிழர்கள் குறித்தான படமாக ‘காலா’ தயாராகியுள்ளது. தன் இன மக்களுக்காக மனிதத்துடன் செயல்படும் மிகச் சிறந்த மனிதர் ரஞ்சித்” எனக் கூறினார்.