திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மதம் பிடித்த யானை ஒன்று தனது பாகனை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் பிரசிதிப்பெற்ற தலங்களில் ஒன்று சமயபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்ன் கோவில். இங்கு, வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முதல் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான மசினி என்ற பெண் யானை ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. மசினிக்கு தற்போது 10 வயது ஆகிறது.
சமயபுரம் மாரியம்மனுக்கு தினமும் பூஜை மற்றும் அபிஷேகம் செய்யப்படும் காலங்களில் யானை கோவில் வளாகத்திற்குள் அழைத்து வரப்படும். மற்ற நேரங்களில் அதன் அறையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் யானை மசினியை பாகன் கஜேந்திரன் கோவில் வளாகத்திற்குள் அழைத்து வந்தார். அங்கு உற்சவர் அம்மனுக்கு எதிரே உள்ள இடத்தில் யானையை பாகன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
அங்கு வந்த பக்தர்கள், யானைக்கு காணிக்கை, பழங்கள் கொடுத்து ஆசிர்வாதம் பெற்று சென்றனர். அப்போது, வெளியூரை சேர்ந்த பெண் ஒருவர் யானைக்கு காணிக்கை அளித்தபோது, அது திடீரென தும்பிக்கையால் தள்ளிவிட்டது. இதன் பிறகு யானையிடம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. யானையின செயலை கவனித்த பாகன் உடனடியாக அதனை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முயற்சித்தான். ஆனால், சத்தமாக பிளறிய யானை திடீரென வெறிப்பிடித்து ஓடத் தொடங்கியது.
இதனால் அலறியடித்த பக்தர்கள் பயத்தில் கோவில் வளாகத்தைவிட்டே ஓடினர். யானையை கட்டுக்குள் கொண்டுவர பாகன் அதனை அடித்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த யானை பாகனை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில், பாகன் சுவற்றில் மோதி படுகாயமடைந்தார். இருப்பினும், எழுந்து யானையை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார். அப்போது, பாகனை கீழே தள்ளிய யானை மிதித்தது. இதில், பாகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் மற்றொரு பெண் யானையைக் கொண்டு அதனை சாந்திப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து, கோவில் நடைசாத்தப்பட்டது. யானை, பாகனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com